தங்கப் புதையல் எடுத்துக் கொடுப்பதாக கூறி தம்பதியிடம் ரூ.8 லட்சம் பறித்த கும்பல் கைது

3 hours ago 2

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாந்தபுரம் செந்தமிழ் நகரைச் சேர்ந்த தம்பதி ராதம்மா-குள்ளப்பா. பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த லட்சுமிகாந்த் என்ற நபர் உங்கள் வீட்டுக்கு அருகில் தங்கப் புதையல் இருக்கிறது என்று ராதம்மா - குள்ளப்பா தம்பதியிடம் ஆசை காட்டியுள்ளார்.

மேலும் புதையலை எடுக்க ஒரு கும்பலையும் அழைத்து வந்துள்ளார். இரவில் குழி தோண்டிய அந்த கும்பல் தம்பதியின் கவனத்தை திசை திருப்பி, செயற்கையாகப் புதைக்கப்பட்ட பானையிலிருந்து 2 தங்கக் காசுகளை எடுத்துக் காண்பித்து நம்ப வைத்துள்ளனர். மேலும் இன்னும் ஆழத்தில் பெரிய புதையல் இருப்பதாக கூறி அதை எடுக்க ரூ.8 லட்சம் பெற்றுள்ளனர்.

பின்னர் மற்றொரு பானையை எடுத்துக் கொடுத்து, அந்த பானைக்கு தினமும் பூஜை செய்து வர வேண்டும் என்றும், பூஜை முடிவதற்குள் திறந்து பார்த்தால் ரத்த வாந்தி எடுத்து சாவீர்கள் என்றும் பயத்தை ஏற்படுத்தி உள்ளனர். அதை நம்பி அவர்களும் தினமும் பூஜை செய்து வந்துள்ளனர். சில நாட்கள் கழித்து அந்த கும்பல் மேலும் தங்களுக்கு பணம் தேவை என்று ராதம்மாவிடம் கேட்டுள்ளனர்.

இந்த நிலையில் ராதம்மாவின் மகன் சந்தேகமடைந்து புதையல் இருப்பதாக கூறிய பானையை திறந்து பார்த்துள்ளார். அதில் ஒன்றும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தம்பதியை ஏமாற்றி பணம் பறித்த 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

Read Entire Article