
திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா (75-வது ஆண்டு) நிகழ்ச்சியில் இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்பொழுது கல்லூரியின் 'Global Jamalians Block' கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து பவள விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஆய்வு கூட்டம், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும், உங்களை போன்ற இளம் மாணவர்களை சந்திக்கும் போதுதான் எனக்கு எனர்ஜி அதிகமாகுகிறது. அதிலும் மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு உடனே வருகிறேன் என சொல்லிவிடுவேன்.
காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என நமக்கான பல வழிகள் உள்ளன. ஆனால், மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது.
மாணவர்களால் தான் கல்லூரிக்கு பேரும் புகழும் கிடைக்கும். கல்விதான் மாணவர்களுக்கு நிலையான சொத்து, உங்க சீனியர்ஸ் எங்க கேபினெட் மினிஸ்டர்ஸ்..
"ஓரணியில் தமிழ்நாடு" என்ற முழக்கத்தோடு நின்றால் தமிழ்நாட்டை யாராலும் வீழ்த்த முடியாது. நான் அரசியல் பேசவில்லை, மாணவர்கள் நிச்சயம் அரசியல் புரிதல் இருக்க வேண்டும் என பேசுகின்றேன். கல்லூரிகள் எத்தனையோ பல தலைவர்களை நாட்டுக்கு கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட தலைவராக மாணவர்கள் நீங்களும் உருவாக வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்பது தான் நமது திராவிட மாடல்.
தமிழ் சமூகத்தை அறிவு சமூகமாக உருவாக்கி பல வாய்ப்புகளை உருவாக்கி தருகிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை கல்வி அவசியம் என்பதால் திமுக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. கல்வி கற்க பொருளாதார தடை இருக்கக் கூடாது. அதனால் மாணவர்களுக்கு பல திட்டங்களை அளித்து வருகிறோம்.
சமூக நீதி போராட்டங்களின் பிரதிபலிப்புதான் இன்று நாம் பார்க்கின்ற இந்த தமிழ்நாடு. 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் கொடுக்க இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.