
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளது. இங்கிருந்து ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு அனைத்தும் உணவுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. இத்தொழிலை நம்பி மரக்காணம் பகுதியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் உள்ளனர். இப்பகுதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தொடங்கும் உப்பு உற்பத்தி பணி தொடர்ந்து அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை நடைபெறும்.
இந்த நிலையில், கோடை வெயிலால் மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தி அமோகமாக நடைபெற்று வருகிறது. தற்போது உப்பளத்தில் உற்பத்தியான உப்பை வாரி அள்ளி தொழிலாளர்கள் குவியல் குவியலாக சேகரித்து வருகிறார்கள். 100 கிலோ கொண்ட மூட்டையின் விலை ரூ.500 வரை விற்பனையாவதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடப்பாண்டில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர் ஒருவர் கூறினார்.