கோடை விடுமுறையை முழுமையாக வழங்க அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

12 hours ago 3

ஊட்டி, மே 3: மே மாதம் கோடை விடுமுறையை முழுமையாக வழங்க வலியுறுத்தி ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி பணியாளர்களுக்கு மே மாதம் கோடை விடுமுறையை முழுமையாக வழங்கிட வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பிட வேண்டும். பல்வேறு குளறுபடிகளை உருவாக்கும் டிஎச்ஆர்., திட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பழிவாங்கும் நோக்கில் செயல்படும் மாவட்ட ஒருங்கிணைப்பாளரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டத்திற்கு அங்கன்வாடி பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கவிதா தலைமை வகித்தார். செயலாளர் சசிகலா மற்றும் இணை செயலாளர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிஐடியு., மாவட்ட தலைவர் சங்கரலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். போராட்டத்தின் போது, கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post கோடை விடுமுறையை முழுமையாக வழங்க அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article