![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/05/37741602-8-revabnth-reddy.webp)
ஐதராபாத்,
2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடைபெற்றது. இதில் கோலாலம்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ ரூ. 5 கோடி பரிசுத்தொகை அறிவித்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகி மற்றும் தொடரின் தொடர் நாயகி விருதை இந்தியாவின் தொடக்க வீராங்கனையான கோங்கடி திரிஷா பெற்றார். அவர் இறுதிப்போட்டியில் 44 ரன்களும், தொடரில் 7 ஆட்டத்தில் 309 ரன்களும் எடுத்து அசத்தினார்.
ஜூனியர் டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தெலுங்கானாவை சேர்ந்த கோங்கடி திரிஷா இன்று தெலுங்கானா முதல்- மந்திரி ரேவந்த் ரெட்டியை சந்தித்து பேசினார். இந்நிலையில், ஜூனியர் டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோங்கடி திரிஷாவுக்கு ரூ.1 கோடி பரிசு தொகை வழங்கப்படும் என தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்து உள்ளார்.
மேலும், ஜூனியர் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த மற்றொரு தெலுங்கானா வீராங்கனை துருதி கேசரி, அணியின் தலைமை பயிற்சியாளர் நவுஷீன் மற்றும் பயிற்சியாளர் ஷாலினி ஆகியோருக்கு தலா ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் எனவும் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்து உள்ளார்.