சென்னை: கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 14.6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கிய முதல்வருக்கு தொமுச சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோ-ஆப்டெக்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் பொதுச்செயலாளர் (சென்னை) மு.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை: கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளாக விற்பனையில் முன்னேற்றம் கண்டு தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது. தனியார் ஜவுளி கடைகளுக்கு நிகராக பல்வேறு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2023-2024 ஆண்டு விற்பனையை காட்டிலும் இந்த ஆண்டில் இதுவரை சுமார் ரூ.18 கோடி அளவிற்கு விற்பனை உயர்ந்துள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் கடந்த ஆண்டு ரூ.9.50 கோடி லாபம் ஈட்டியுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட வருட இடைவெளியில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 90 ஆண்டு வரலாற்றில் பணியாளர்களுக்கு அதிகப்பட்சமாக 11 சதவீதம் ஊதிய உயர்வுதான் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 1.7.2023 முதல் கோ-ஆப்டெக்ஸ் பணியாளர்களுக்கு 14.6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கி நேற்று முன்தினம் முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக மாற்றி அமைக்கப்படாத பணியாளர்களின் ஊதிய விகிதம் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு இணையான வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வால் கோ-ஆப்டெக்ஸ் பணியாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும். ஊதிய உயர்வை 14.6 சதவீதம் உயர்த்தி வழங்கிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோருக்கு தொமுச நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வருக்கு தொமுச நன்றி appeared first on Dinakaran.