பெரும்புதூர், மார்ச் 20: படப்பையில் பணம் கொள்ளை போன சம்பவம் குறித்து புகார் கொடுத்தவரிடம், ரூ.1000 லட்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்களையும் தாம்பரம் காவல் துறை கமிஷனர் சஸ்பெண்ட் செய்து உத்திரவிட்டுள்ளார்.
படப்பை சார் பதிவாளர் அலுவலகத்தில் நிலத்திற்கு பவர் எழுதி கொடுத்துவிட்டு, வாங்கிய ரூ.6 லட்சம் பணம் கொள்ளைபோன சம்பவம் குறித்து, மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தவரிடம், 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்களை, தாம்பரம் மாநகர காவல்துறை கமிஷனர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முசாமில் அகமது (39). சிந்தாதிரிப்பேட்டையில், சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு, சொந்தமான நிலம் காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த சொரப்பணஞ்சேரி பகுதியில் உள்ளது. அந்த, இடத்தை பவர் எழுதி கொடுப்பதற்காக தன்னுடைய தந்தையுடன் ஷிப்ட் காரில் கடந்த 18ம்தேதி படப்பை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார். தன்னுடைய நிலத்தை ஜெகத்குமார் என்பவருக்கு பவர் எழுதி கொடுத்துவிட்டு, அவரிடமிருந்து ரூ.6 லட்சம் பணத்தை வாங்கி தன்னுடைய காரின் டிக்கியில் வைத்துள்ளார். பின்னர், சார்பதிவாளர் அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்ப காரை எடுப்பதற்காக வந்தபோது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.6 லட்சம் பணம் திருடுபோய் இருந்தது.
அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், இக்கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, மணிமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சதீஷ்குமார், புகார்தாரின் தந்தையிடம் ரூ.1000 லஞ்சமாக பெற்றுள்ளார். இந்த பணத்தை, கைரேகை பிரிவில் பணிபுரியும் காவலர் ஏழுமலை வாங்கி, சதீஷ்குமாரிடம் வழங்கியதும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் தற்காலிக பணியிட நீக்கம் செய்து தாம்பரம் மாநகர காவல்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
The post கொள்ளை சம்பவம் குறித்து புகார் கொடுத்தவரிடம் ரூ.1000 லஞ்சம் வாங்கிய 2 போலீஸ் சஸ்பெண்ட்: தாம்பரம் போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.