
முல்லன்பூர்,
ஐ.பி.எல். தொடரில் முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 111 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் தரப்பில் ப்ரப்சிம்ரன் சிங் 30 ரன் எடுத்தார்.
கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 112 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி, பஞ்சாப் வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.1 ஓவரில் 95 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 16 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் திரில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் தரப்பில் அபாரமாக பந்துவீசிய யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த வெற்றியைப் பற்றி வார்த்தைகளால் விவரிப்பது கடினமாக உள்ளது.
தனிப்பட்ட முறையில் நான் 2 பந்துகளை எதிர்கொண்டு பேட்டிங் செய்த போது ஒன்று கீழே வந்தது. மற்றொன்று பேட்டுக்கு அடியில் வந்தது. அதனால் ஸ்வீப் ஷாட் அடிப்பது அனைவருக்குமே கடினமாக இருந்தது. நல்ல பவுன்ஸ் இருந்த இந்த ஆடுகளத்தில் நாங்கள் வெற்றிக்கு தேவையான இலக்கை எடுத்தோம்.
பவுன்ஸ் சீராக இல்லாததை மனதில் வைத்து செயல்படுமாறு எங்கள் பவுலர்களிடம் சொன்னேன். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் எடுத்தது எங்களுக்கு வேகத்தை கொடுத்தது. அதை 2 புதிய பேட்ஸ்மேன்கள் வந்து தங்கள் பக்கம் எடுக்க முயற்சித்தனர். சாஹல் வந்து பந்தை சுழற்றியதைப் பார்த்ததும் வெற்றி பெற முடியும் என்ற எதிர்பார்ப்பும், தன்னம்பிக்கையும் எங்களுக்கு உச்சமாக வந்தது.
எதிரணி பேட்ஸ்மேன்கள் முகத்துக்கு முன்பே அட்டாக் செய்யும் பீல்டிங்கை நிறுத்தி அவர்களைத் தவறு செய்ய வைத்தேன். இந்த வெற்றியால் அதிகம் ஆடாமல் பணிவுடன் இருந்து நேர்மறை விஷயங்களை எடுத்துக்கொண்டு அடுத்தப் போட்டிக்கு செல்வது முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.