சிற்பமும் சிறப்பும்
காலம்: பொ.ஆ 1250 இல் கீழை கங்க வம்ச மன்னர் முதலாம் நரசிங்க தேவனால் கட்டப்பட்டது.
அமைவிடம்: கொனார்க் சூரியக் கோயில், ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் உள்ள பூரி நகரத்திலிருந்து வடகிழக்கே சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
“மனித மொழியை கல்லின் மொழி மிஞ்சும் அற்புதமான இடம்”
– நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர், கொனார்க் சூரியக்கோவில் பற்றி எழுதியது.
சூரியக் கோயில்கள்
பண்டைய பாரதத்தில் சூரிய வழிபாட்டுக்கென அமைந்த பெரிய அளவிலான ஆலயங்களில் புகழ் பெற்றவை:காஷ்மீரின் மார்த்தாண்ட் சூரியக்கோயில் (பொ.ஆ.8 ஆம் நூற்றாண்டு), குஜராத்தின் மொதேரா சூரியக் கோயில் (பொ.ஆ.11 ஆம் நூற்றாண்டு) மற்றும் ஒடிசாவின் கொனார்க் சூரியக்கோயில் (பொ.ஆ.13 ஆம் நூற்றாண்டு).
கோனார்க்
கோனார்க் (கோனார்கா) என்ற பெயர் சமஸ்கிருத சொற்களான ‘கோனா’ (மூலை அல்லது கோணம்) மற்றும் ‘அர்கா’ (சூரியன்) ஆகியவற்றின் கலவையாக அமைந்தது.
கொனார்க் சூரியக் கோயில், ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் உள்ள பூரி நகரத்திலிருந்து வடகிழக்கே சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
‘சூரிய தேவாலயம்’ என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோயில், பொ.ஆ 1250 இல் கீழை கங்க வம்ச மன்னர் முதலாம் நரசிங்க தேவனால் கட்டப்பட்டது. இக்கோயில் ஒடிசாவின் கலிங்க கட்டிடக்கலையின் உன்னத வடிவமாகப் போற்றப்படுகிறது.
சூரியன்
வேதங்களின் குறிப்புகளின் படி, சூரியன் கிழக்கில் இருந்து எழும்புவதாகவும், ஏழு குதிரைகள் இழுக்கும் தேரில் வானத்தில் வேகமாக பயணிப்பதாகவும் குறிப்பிடப் படுகிறது. தேரோட்டியான அருணனால் செலுத்தப்படும் தேரில் ஏறி, இரண்டு கைகளிலும் தாமரை மலரை ஏந்தியபடி, பிரகாசமாக நிற்பவராக அவர் விவரிக்கப்படுகிறார்.சூரியனின் பக்கவாட்டில் உஷா மற்றும் பிரத்யுஷா ஆகிய உதயகால பெண் தெய்வங்கள் காணப்படுகின்றனர்.
கோயில் அமைப்பு
ஒடிசா கட்டிடக்கலையின் உச்சக்கட்டமாக விளங்கும் இக்கோயில், 24 சக்கரங்களுடன் கூடிய பிரமாண்டமான தேராகக் கட்டப்பட்டு, 7 குதிரைகளால் இழுக்கப்பட்டுச் செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.நுழைவாயிலின் இருபுறமும் இரண்டு பெரிய சிங்கங்கள் பாதுகாத்து நிற்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு போர் யானையைக் கொன்று, அவற்றின் மீது நிற்கின்றன. ஒவ்வொரு யானைக்கு கீழேயும் ஒரு மனிதன் உள்ளான்.
மூல கோயிலின் கருவறை விமானம் 229 அடி உயரம் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.சுமார் 128 அடி உயரமுள்ள பிரதான பார்வையாளர் மண்டபம் (ஜகமோகனா) இன்னும் நிற்கிறது.
சூரிய கோயிலின் தேர்ச் சக்கரங்களில் நுண்ணிய வேலைப்பாடுகள் குறிப்பிடத்தக்கவை. விஷ்ணு, சிவன், கஜலட்சுமி, பார்வதி, கிருஷ்ணர், நரசிம்மர் மற்றும் பிற தெய்வ சிற்பங்கள் காணப்படுகின்றனர்.
கொனார்க் கோயில் சிற்றின்ப சிற்பங்களுக்காகவும் புகழ்பெற்றது.இக்கோயில் மூன்று வகையான கற்கள் கொண்டு கட்டப்பட்டது. குளோரைட்(Chlorite) கற்கள், கதவு, ஜன்னல்கள் மற்றும் சில சிற்பங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. மேடையின் மையப்பகுதி மற்றும் அடித்தளத்திற்கு அருகில் படிக்கட்டுகள் ஆகியவை லேட்டரைட்(Laterite) கற்கள் கொண்டு அமைக்கப்பட்டது. மற்ற பகுதிகளுக்கு கொண்டலைட்(Khondalite) வகைக்கற்கள் பயன்படுத்தப்பட்டது.
16 ஆம் நூற்றாண்டில் அன்னிய மதத்தவர் தாக்குதல், பின்னர் இயற்கை சீற்றங்கள் போன்றவற்றால் இக்கோயிலுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது.யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் இக்கோயில், இந்திய தொல்லியல் துறையினரின் பராமரிப்பில் உள்ளது.கொனார்க் சூரியக் கோயில், இந்திய கலாச்சார பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில், புதிய 10 ரூபாய் தாளின் பின்புறத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மது ஜெகதீஷ்
The post கொனார்க் சூரியக் கோவில் appeared first on Dinakaran.