கொண்டைக் கடலை! : கொஞ்சம் பராமரிப்பு கூடுதல் வருமானம்

2 weeks ago 5

தமிழகத்தில் பயறுவகைப் பயிர்களில் கொண்டைக்கடலைக்கு எப்போதும் மவுசு அதிகம். சுண்டல் கடலை, பனிக்கடலை என்றும் அழைக்கப்படும் கொண்டைக்கடலை பொதுவாக ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. மிக குறைந்த அளவில் நீர் தேவை என்பதுடன் பனிப்பொழிவினை தாங்கி செழித்து வளரும் தன்மை கொண்ட கொண்டைக்கடலைக்கு அதிக அளவில் தேவை இருப்பதால் வெள்ளை, அடர் பழுப்பு மற்றும் பச்சை நிறத்தில் இடத்திற்கு ஏற்றாற் போல் சாகுபடி செய்யப்படுகிறது. விதைப் பண்ணைகள் அமைத்து தரமான விதைகளை உற்பத்தி செய்து கொடுக்கும் விவசாயிக்கு வேளாண்மைத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு விதைகள் உற்பத்தி முகமை (டான்சீடா)யின் மூலம் ஒரு கிலோ விதைக்கு ஆதார நிலையில் 105ம், சான்று நிலை விதைக்கு ரூபாய் 115ம் வழங்கி கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் 10 ஆண்டுக்கு உட்பட்ட புதிய ரக விதைகளை விதைப்பண்னை அமைத்து உற்பத்தி செய்து தரும் விவசாயிகளை ஊக்குவிக்க தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச் சத்துக்கள் திட்டத்தில் ஒரு கிலோ விதைக்கு ரூ.25 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

இத்தகைய பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த கொண்டைக்கடலை சாகுபடியில் ஒருங்கிணைந்த உர நிர்வாகம், பயிர்களின் எண்ணிக்கையைப் பராமரித்தல், இலைவழி ஊட்டச்சத்து தெளித்தல் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் போன்ற தொழில்நுட்பங்களைப் பின்பற்றி அதிக மகசூல் பெறலாம். இதுகுறித்து விளக்குகிறார் கோயம்புத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சு.வெங்கடாசலம்.என்பிஇஜி-47, 49 மற்றும் 117 போன்ற அதிக மகசூல் தரக்கூடிய ரகங்களை சாகுபடிக்கு தேர்வு செய்யலாம். இதை குளிர்காலமான நவம்பர் மாதத்தில் விதைக்கலாம். ஒரு ஹெக்டேருக்கு 70-75 கிலோ விதைகளை விதைக்கும்போது செடிக்குச் செடி 10 செ.மீ, பாருக்கு பார் 30 செ.மீ இடைவெளி இட வேண்டும். முன்செய் நேர்த்தியாக நிலத்தை 3-4 முறை புழுதிபட நன்கு உழவு செய்ய வேண்டும். விதைகளை விதை நேர்த்தி செய்ய ரைசோபியம் 50 மில்லி, பாஸ்போ 50 மில்லி, டிரைக்கோடெர்மா விரிடி 2.5 கிலோ கொண்டு அரிசிக் கஞ்சியுடன் நன்கு கலந்து 24 மணி நேரத்திற்குப் பின்பு விதைப்பு செய்ய வேண்டும். அல்லது ரசாயன முறையில் 1 கிலோ விதைக்கு 2 கிராம் பவிஸ்டின் உடன் கலந்து பின் விதைக்கலாம்.நிலத்தை நன்கு உழுது ஒரு ெஹக்டேருக்கு 12.5 டன் தொழுஉரத்தினை கடைசி உழவில் இடவேண்டும். விதைப்புக்குப் பின் 15 அல்லது 30ம் நாட்களில் கைகளைக் கொண்டு களை நிர்வாகம் செய்ய வேண்டும் அல்லது ஒரு ஹெக்டேருக்கு தேவையான பென்டிமெத்தின் 2.5 லிட்டர் என்ற களைக்கொல்லியை விதைத்த 3ம் நாளில் மண்ணில் படும்படி களைக்கொல்லியை 500 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். 25ம் நாள் கைகளைக் கொண்டு களை நிர்வாகம் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை வழங்கும் ஒரு ஹெக்டேருக்கு தேவையான 5 கிலோ நுண்ணூட்ட கலவையினை மணலுடன் கலந்து இடுவதால் பயிரின் மகசூல் அதிகரிக்கிறது. பயிரின் வளர்ச்சியைப் பொருத்து வளர்ச்சி பருவம், பூக்கும் தருணம், காய்க்கும் தருணம் போன்ற பருவத்தில் நீர்பாய்ச்ச வேண்டும். குறிப்பாக பயிர்வகைப் பயிர் சாகுபடிக்கு நிலத்தில் நீர் தேங்கக்கூடாது. இதனால் செடிகள் அழுகிவிடக் கூடிய நிலை நேரிடலாம். ஒரு ஹெக்டேருக்கு 12.5 கிலோ டி.ஏ.பியை பூக்கும் மற்றும் காய்க்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு தேவையான 12.5 கிலோ டி.ஏ.பி-யை 10-15 லிட்டர் நீரில் முதல் நாளே கலந்து பின்பு நன்கு வடிகட்டி தெளிவான கரைசலை 625 லிட்டர் நீர் கலந்து செடிகள் நனையும்படி தெளிக்க வேண்டும். பூச்சி மற்றும் நோய் மருந்துகளுடன் கலந்து தெளிக்கக்கூடாது. அசுவனி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சி, வெட்டுப்புழு, அரைக் காவடிப்புழு, கரையான் போன்றவற்றைக் கட்டுப்படுத்த குளோரிபைரிபாஸ் 50 சதவீதம் இசி அல்லது பிப்ரோனில் அல்லது மொமேட்டின் பேன்சோயேன் போன்ற மருந்தினை நீரில் கலந்து பயிர் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும். உலர் வேர் அழுகல் நோய், கழுத்துப்பட்டை அழுகல் நோய், வேர் அழுகல் வாடல் நோய் போன்ற நோயினைக் கட்டுப்படுத்த மேன்கேசிப் 45 அல்லது மேடாலாக்சில் என்ற பூஞ்சானக் கொல்லி ஒன்றை தெளிக்க வேண்டும். அறுவடை விதைத்த 85-90 நாட்களில் காய்கள் முற்றிய பின் அறுவடை செய்யலாம். காய்களை உடைத்து விதைகளை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும். ஒருங்கிணைந்த முறையில் பயிரிடுவதன் மூலம் ஹெக்டேருக்கு 1000-1150 கிலோ வரை மகசூல் கிடைக்கும். மேலும் தகவலுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையங்களை அணுகலாம். உழவர் செயலியின் மூலம் இருப்பு நிலை மற்றும் மானியம் திட்டங்கள் போன்ற விபரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

The post கொண்டைக் கடலை! : கொஞ்சம் பராமரிப்பு கூடுதல் வருமானம் appeared first on Dinakaran.

Read Entire Article