கொடைக்கானலில் நெரிசலுக்கு குட்-பை: மாற்றுச்சாலை அமைக்க அதிகாரிகள் நேரடி ஆய்வு

3 months ago 10

கொடைக்கானல்: கொடைக்கானலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, மாற்றுச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று மேற்கொண்டனர்.

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில், கோடை சீசன், வார இறுதி நாட்கள், விடுமுறை காலங்களில் பயணிகள் வருகை பல மடங்கு அதிகரிக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல், தவிர்க்க முடியாததாகி வருகிறது. நெரிசலை கட்டுப்படுத்த இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. இருப்பினும், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி கொடைக்கானல், பெருமாள்மலைப் பகுதியில் இருந்து அப்சர்வேட்டரி பகுதி வரை ஏற்படும் நெரிசலை தடுக்க மாற்றுச்சாலை அமைக்க முடிவானது. அதன்படி, மாற்றுச்சாலை திட்டம் தொடர்பான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் 3 மாற்றுச் சாலைகள் திட்டங்களுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அவர்களது பரிந்துரையின் பேரில், மாற்றுச்சாலை அமைய இருக்கும் பகுதிகளை 2 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், கொடைக்கானலை அடுத்த வில்பட்டி – கோவில்பட்டி – பேத்துப்பாறை வழியாக பெருமாள்மலை செல்ல மாற்றுச் சாலை அமைத்தால், சுற்றுலாப் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து இந்த மாற்றுச்சாலை குறித்து, மதுரை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், துணை கண்காணிப்பு பொறியாளர் சேதுராஜன், திண்டுக்கல் கோட்ட பொறியாளர் சங்கர், கொடைக்கானல் உதவி கோட்ட பொறியாளர் ராஜன், மதுரை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் பார்த்திபன், அனுசுயா உள்ளிட்டோர் நேற்று நேரடி ஆய்வுப் பணிகளை நடத்தினர்.

நெடுஞ்சாலைத் துறையினரின் நேர்பாடு என அழைக்கப்படும் இந்த ஆய்வு பணி 2ம் முறையாக நடந்துள்ளது. குறைந்த செலவில், குறைந்த தூரத்தில் சாலைகள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து தொழில்நுட்ப அடிப்படையில் மேற்கொள்ளப்படுவது நேர்பாடு ஆய்வு என அழைக்கப்படுகிறது. மாற்றுச்சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். மாற்றுச்சாலை உருவானால், கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் தடுக்கப்படும்.

The post கொடைக்கானலில் நெரிசலுக்கு குட்-பை: மாற்றுச்சாலை அமைக்க அதிகாரிகள் நேரடி ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article