‘‘பணியிட மாற்றம் தொடர்பா எங்களுக்கு ஏன் பொறுப்பு வழங்கலன்னு சீனியாரிட்டி தாசில்தார்கள் பு லம்பல் சத்தம் ஒலிக்க தொடங்கியிருக்காமே தெரியுமா..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘சாதாரணமாகவே அரசு அதிகாரிகள் ஒரு பணியிடத்தில் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை பணியாற்றுவாங்க.. அப்புறமா பணியிட மாற்றம் செய்யப்படுவாங்க.. அதுபோல தான் குயின்பேட்டை மாவட்டத்துலயும் பணியிட மாற்றங்கள் நடக்குது.. இதுல சமீபத்துல வருவாய்த்துறையில தாசில்தார்கள் பணியிடமாற்றம் நடந்திருக்குது.. அதாவது 8 தாசில்தார்கள் சீனியாரிட்டி அடிப்படையில முன்னிலையில இருக்குறாங்களாம்..
ஆனா, மாவட்டத்துல கோணம் பாதியான தாலுகாவுலயும், வா என்று தொடங்கி ஜா என்று முடியுற தாலுகாவுலயும் ஏற்கனவே பொறுப்பு வழங்குன தாசில்தார்களுக்கே திரும்பவும் ரெகுலர் தாசில்தார்களாக பொறுப்பு வழங்கப்பட்டிருக்குதாம்.. இதனால சீனியாரிட்டியில இருக்குற மத்த தாசில்தார்கள் புலம்பத் தொடங்கியிருக்குறாங்க.. இந்த புலம்பல் சத்தம் குயின்ேபட்டை மாவட்டங்களையும் தாண்டி கேட்க ஆரம்பிச்சிடுச்சாம்.. எப்படி, இப்படி நடந்துச்சுன்னு மாவட்ட நிர்வாகம் சரிபார்த்து நடவடிக்கை எடுக்கணும்னு குரல்கள் ஒலிக்க தொடங்கியிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேனிக்காரர் அணியில் உள்ள முக்கிய நிர்வாகியை ரகசியமாக இலைக்கட்சியினர் சந்தித்துவிட்டுச் சென்றது சலசலப்பை ஏற்படுத்தி இருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘டெல்டாவில் தேனிக்காரர் அணியில் உள்ள நிர்வாகி ஒருவரை இலை கட்சியின் நிர்வாகிகள் ரகசியமாக சந்தித்து பேசினார்களாம்.. அந்த நபர் நீண்ட நாட்கள் கழித்து, டெல்டாவுக்கு வந்தாராம்.. இதையறிந்த இலை கட்சியின் நிர்வாகிகள், அவரை சந்தித்து சில நிமிடங்கள் பேசினார்களாம்.. இந்த சந்திப்பின் போது, வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லையாம்.. இது தேனிக்காரர் அணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்காம்..
இலை கட்சியின் நிர்வாகிகள் என்ன பேசி விட்டு சென்றார்கள் என்பதை கண்டறியும் முயற்சியில் தேனிக்காரர் அணியினர் தீவிரமாக இறங்கி இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தேர்தலுக்காக நடந்த துறைமுக நாடகம் ஏமாற்றத்தை கொடுத்தும், மீண்டும் அடுத்த தேர்தலுக்கு துறைமுக விவகாரத்தை தாமரை கட்சியினர் கையில் எடுத்திருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கேரளாவில் விழிஞ்ஞத்தில் இந்தியாவின் முதல் ஆழ்கடல் கன்டெய்னர் மாற்று துறைமுகம் அமைக்கப்பட்டு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
விழிஞ்ஞம் இன்டர்நேஷனல் சீ போர்ட் லிமிடெட் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இந்த துறைமுகம் அதானி குழுமத்தால் 40 ஆண்டுகளுக்கு இயக்கப்படுகிறது.. இந்த வேளையில் இந்த திட்டம் கடைகோடி மாவட்டத்திற்கு வரவேண்டிய திட்டம், ரூ.28 ஆயிரம் கோடி அமைக்க தந்துவிட்டதை இழந்துள்ளதாக தாமரை கட்சியினர் இப்போது திடீரென்று ஒப்பாரி வைக்க தொடங்கி இருக்காங்க.. கடைகோடி மாவட்டத்தில் சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைப்பதற்கான முதல்கட்ட ஆய்வு பணிகளே 2017ல்தான் தொடங்கப்பட்டது.. ஆனால் 2015ல் விழிஞ்ஞத்தில் துறைமுகம் அமைக்க அதானி குழுமத்துடன் ரூ.8867 கோடிக்கு ஒப்பந்தமே போடப்பட்டுவிட்டது.
கடைகோடி மாவட்டத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் தனியார் பங்களிப்புடன் விழிஞ்ஞத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் வரும்போது அதன் அருகே அதனை விட பிரமாண்ட வேறு துறைமுகம் அமையுமா, அதனையும் அவர்களே அமைக்க விடுவார்களா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, மறுபுறம் துறைமுகத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களும் சூடுபிடித்தன. தேர்தல் காலம் நெருங்கியது என்பதால் ரூ.28 ஆயிரம் கோடி பறிபோய்விட்டது என்று கூறி தாமரை கட்சியினர் மக்களிடம் வாக்குகளை பெற முயன்றாங்க.. ஆனால் தேர்தலுக்காக நடந்த துறைமுக நாடகத்தை மக்கள் நம்பவில்லை.
மக்கள் ஏமாற்றத்தைதான் அந்த தேர்தலில் அவர்களுக்கு பரிசாக கொடுத்தாங்க.. இப்போது மீண்டும் அந்த துறைமுக விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர் தாமரை கட்சியினர். அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு சப்ஜெக்டை இப்போதே தயார் செய்துவிட்டாங்க என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கொடநாடு விவகாரத்தில் இலைக்கட்சி தலைவரிடமும் விசாரிக்க போறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கொடநாட்டில் மம்மி பங்களாவில் நடந்த மர்டர், கொள்ளையில் உண்மை உலகத்துக்கு தெரிஞ்சாகணுமுன்னு இலைக்கட்சி தொண்டர்கள், இன்னும் மிகுந்த ஆர்வமாக இருக்காங்களாம்..
மம்மி பங்களா என்று தான் பெயர், ஆனால் உண்மையான உரிமையாளர் சின்னமம்மி தானாம்.. இதனால பங்களாவில் என்ன இருந்தது, எதெல்லாம் திருட்டு போனதுன்னு சிறைப்பறவையான சின்னமம்மிக்கு தான் தெரியுமாம்.. ஆனால், கட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் இருந்த சின்ன மம்மியோ, ஏற்கனவே ரெண்டு முறை நடந்த விசாரணையில், குறிப்பிட்டு சொல்லும் வகையில் எதையும் சொல்லலையாம்.. ஆனால், யாரு சொல்லி மம்மி பங்களாவுக்குள்ள கொள்ளை கும்பல் நுழைஞ்சாங்க என்ற முழு தகவலும் அவருக்கு தெரியுமாம்.. அதே நேரத்தில் சிபிசிஐடியின் தீவிர விசாரணையில் பல்வேறு ஆதாரங்கள் கிடைச்சிருக்காம்..
வெளிநாட்டில் இருந்து வந்த செல்போன் அழைப்புகளை வச்சி விசாரிக்க, இண்டர்போல் போலீசாரின் உதவியும் தேவைப்பட்டதாம்.. இதை வச்சி விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி இருக்காங்களாம்.. மம்மியோட மாஜி வளர்ப்பு மகன், நேர்முக உதவியாளருன்னு விசாரணை போயிக்கிட்டிருக்காம்.. சின்ன மம்மியோட பெண் உறவினருக்கும் சம்மன் போயிருக்காம்.. எல்லோரிடமும் பெறப்படும் வாக்குமூலம் ரொக்கார்டு ஆகுதாம்.. இறுதிகட்டமாக இலைக்கட்சி தலைவரிடமும் என்கொயரி நடத்த போறாங்களாம்..
அந்நேரத்தில் அவர்தான் சிஎம்மா இருந்தாராம்.. இவரிடமும் ஏதாவது விஷயம் கிடைக்குமுன்னு உறுதியா நம்புறாங்களாம் சிபிசிஐடி. இதற்காக முறையாக சம்மன் கொடுத்து விசாரணை நடத்த முடிவு செஞ்சிருக்காங்களாம்.. இதனால அவரோட முக்கிய நண்பருக்கு கொஞ்சம் நடுக்கம் ஏற்பட்டிருக்காம்.. இதற்கிடையில் இன்னும் ஒருசில மாதங்களுக்குள் முழு விசாரணையும் முடிந்திடும் அப்போது எதிர்பாராத திருப்பங்களும் ஏற்படுமுன்னு சொல்றாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post கொடநாடு கொலை, கொள்ளையில் சம்மன் அனுப்பி இலைக்கட்சி தலைவரிடம் என்கொயரி நடத்தப்போவது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.