'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்' திரை விமர்சனம்

1 month ago 9

சென்னை,

இயக்குனர் கே.ரங்கராஜ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்'. இப்படம் பணக்கார வாழ்வுக்கு ஆசைப்படும் நடுத்தர காதல் ஜோடியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பூஜிதா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பார்கவ், சுஜாதா, சிங்கம்புலி, சாம்ஸ், ரமேஷ் கண்ணா, அனுமோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் கே.ரங்கராஜ் இயக்கிய 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

தொழில் அதிபர் பார்கவ் எஸ்டேட்டில் குதிரைகளுக்கு பயிற்சி அளிப்பவராக வேலை பார்க்கிறார் ஶ்ரீகாந்த். பெரும் கோடீசுவரியான சச்சு வீட்டில் பூஜிதா பொன்னாடா வேலை பார்க்கிறார். ஒரு கட்டத்தில் ஶ்ரீகாந்தை தொழில் அதிபர் என்று தவறாக புரிந்து கொள்ளும் பூஜிதா பொன்னாடா அவர் மீது காதல் வயப்படுகிறார். பூஜிதாவை பணக்கார பெண் என்று நினைத்து ஶ்ரீகாந்தும் விரும்புகிறார். இருவரும் திருமணத்துக்கு தயாராகி நிச்சயதார்த்தம் செய்து கொள்ளும்போது உண்மை வெளிப்பட்டு திருமணத்தை நிறுத்தி சண்டை போட்டு பிரிகிறார்கள். இருவரும் மீண்டும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது மீதி கதை.

 வசதியான வாழ்க்கைக்கு ஏங்கும் இளைஞனாக வரும் ஶ்ரீகாந்த் கதாபாத்திரத்துக்கு முழு நியாயம் செய்து இருக்கிறார். பூஜிதாவிடம் சமையல்காரர் உதவியோடு பணக்காரர் என்று நாடகமாடி காதல் வலையில் வீழ்த்துவது கலகலப்பு. சச்சு வீட்டில் காதலி வேலை பார்ப்பவர் என்று தெரிந்து ஆவேசப்பட்டு நடிப்பில் வலிமை சேர்க்கிறார். நாயகி பூஜிதா பொன்னாடா துறுதுறு நடிப்பால் கவர்கிறார். ஶ்ரீகாந்த் ஏமாற்றி விட்டதாக கோபப்பட்டு மோதும்போது ரசனை.

இரண்டாவது நாயகன் நாயகியாக வரும் பரதன், நிமி இமானுவேல் திருப்புமுனை கதாபாத்திரங்களில் கதைக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். கே.ஆர்.விஜயா, சச்சு, டெல்லி கணேஷ், நளினி ஆகியோர் சிறிது நேரம் வந்தாலும் அனுபவ நடிப்பை வழங்கி உள்ளனர். பார்கவ், சுஜாதா, சிங்கம்புலி, சாம்ஸ், ரமேஷ் கண்ணா, அனுமோகன், வினோதினி, கவியரசன், இண்டியா மாணிக்கம் ஆகியோர் காட்சிகளை கலகலப்பாக நகர்த்த உதவியுள்ளனர்.

பழைய பாணியில் கதை நகர்வது குறையாக இருந்தாலும் அதை சுவாரசியமாக சொல்லி இருப்பது பலம். டி.தாமோதரன் கேமரா காட்சிகள் அழகாக படம்பிடித்துள்ளது. ஆர்.கே.சுந்தர் இசையில் பாடல்கள் மனதில் நிற்கின்றன. பணக்கார வாழ்வுக்கு ஆசைப்படும் நடுத்தர காதல் ஜோடியின் மனநிலையை வைத்து ரசிக்கும்படி படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் கே.ரங்கராஜ்.

Read Entire Article