திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டியம் அருகே உள்ளது திருக்கோவில் வட்டம் பஞ்சாயத்து. இங்கு கல்லுவிளைமுக்கு என்ற ஒரு சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. திடீரென இந்த கிராமத்திற்குள் கொசுக்கள் படையெடுக்கத் தொடங்கின நேரம் செல்லச் செல்ல கொசுக்களின் படையெடுப்பு அதிகரிக்கத் தொடங்கியது. கொசு மருந்தை பயன்படுத்தியும், முழு வேகத்தில் பேனை ஓட விட்டுப் பார்த்தும் எந்தப் பலனும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து ஊர் மக்கள் பஞ்சாயத்து அதிகாரிகளை அணுகி விவரத்தை கூறினர். அவர்கள் உடனடியாக சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வியாழன், வெள்ளி அரசு விடுமுறை தினம் என்பதால் சனிக்கிழமை வந்து கொசு மருந்து அடிப்பதாக சுகாதாரத் துறையினர் கூறினர். அதுவரை பொறுத்திருக்க முடியாது என்பதால் அந்த ஊர் மக்கள் உடனடியாக வீடுகளைப் பூட்டி விட்டு தங்களது உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனர். இதனால் கடந்த இரு தினங்களாக கல்லுவிளைமுக்கு கிராமமே காலியாக உள்ளது. இதற்கு முன் இதுபோல கொசுத் தொல்லை இருந்தது இல்லை என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
The post கொசுவுக்கு பயந்து ஊரை காலி செய்த மக்கள் appeared first on Dinakaran.