புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி வீடு மற்றும் 3 பிரபல ஓட்டல்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக முதல்வரின் அலுவலக இ மெயிலுக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் கோரிமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சீனியர் எஸ்.பி.க்கள் கலைவாணன், நாரா சைதன்யா, எஸ்.பி.க்கள் பாஸ்கரன் (சைபர் க்ரைம்), ரகுநாயகம் (கிழக்கு), வீரவல்லபன் (வடக்கு) மற்றும் போலீசார் சென்று முதல்வரின் வீட்ைட காவல் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் திலாசுப்பேட்டையில் அமைந்துள்ள முதல்வர் ரங்கசாமி வீடு மற்றும் அவரது வீட்டில் உள்ள அப்பா பைத்திய சுவாமி கோயில் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்.
வெடிகுண்டு ஏதுமில்லாததால் நிம்மதி அடைந்தனர். இதேபோல் புதுச்சேரி கடற்கரை சாலை ஆனந்தரங்க பிள்ளை வீதியில் உள்ள பிரபல நட்சத்திர தங்கும் விடுதி, ஈஸ்வரன் வீதியில் உள்ள உணவகம், காந்தி வீதியில் உள்ள பிரபல சொகுசு நட்சத்திர விடுதி என அடுத்தடுத்து இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீசார், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு சோதனை நடந்தபோதிலும், முதல்வர் ரங்கசாமி எதையும் கண்டு கொள்ளாமல் வழக்கம்போல் அப்பா பைத்திய சுவாமி கோயிலில் பூஜையில் ஈடுபட்டு பக்தர்களுடன் அன்னதானம் சாப்பிட்டு சென்றார். புதுச்சேரியில் சமீப காலமாக அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர் கதையாகவே நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே ஜிப்மர் மருத்துவமனை, பிரெஞ்சு தூதரகம், காரைக்கால் ஜிப்மர் கிளை வளாகம், புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம், தீயணைப்பு நிலையம், கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. வெடிகுண்டு நிபுணர்களின் சோதனைக்குபிறகு அது புரளி என தெரியவந்தது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பகுதி ரிசார்ட்டுக்கும் மிரட்டல்
புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அடுத்த பிள்ளைச்சாவடி இசிஆர் சாலையில் உள்ள பிரபல ஓட்டலுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடர்ந்து சின்ன கோட்டக்குப்பம் பழைய ஆரோவில் சாலையில் உள்ள தனியார் ரிசார்ட்டுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து விழுப்புரத்தில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் இரு இடங்களுக்கும் வந்து சோதனை மேற்கொண்டனர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.
The post புதுவை முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: 3 பிரபல ஓட்டல்களிலும் சோதனை appeared first on Dinakaran.