சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் காந்தி பதிலளித்து பேசி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
* தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடிப்படைக் கூலியில் 10 விழுக்காடும், அகவிலைப்படியில் 10 விழுக்காடும் உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் 1.5 லட்சம் நெசவாளர்கள் பயன் அடைவர்.
* வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தின்கீழ், பெடல் தறி சேலைகளுக்கு நெசவுக் கூலி ரூ.69.79லிருந்து ரூ.75.95 ஆகவும், பெடல் தறி வேட்டிகளுக்கு நெசவுக் கூலி ரூ.59.28-லிருந்து ரூ.64.38 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இக்கூலி உயர்வினால் ஏற்படும் கூடுதல் செலவினம் ரூ.3.75 கோடியை அரசே ஏற்கும்.
* வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தின்கீழ், விசைத்தறி சேலைகளுக்கு நெசவுக் கூலி ரூ.43.01 லிருந்து ரூ.46.75 ஆகவும், விசைத்தறி வேட்டிகளுக்கு நெசவுக் கூலி ரூ.24லிருந்து ரூ.26.40 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இக்கூலி உயர்வினால் ஏற்படும் கூடுதல் செலவினம் ரூ.8.58 கோடியை அரசே ஏற்கும்.
* பள்ளி மாணாக்கர்களுக்கான சீருடை வழங்கும் திட்டத்தின்கீழ் பெடல்தறி கேஸ்மெண்ட் ரகத்திற்கு, நெசவுக் கூலி மீட்டருக்கு ரூ.7.84லிருந்து ரூ.8.40 ஆகவும், விசைத்தறி டிரில் ரகத்திற்கு நெசவுக் கூலி மீட்டருக்கு ரூ.5.76லிருந்து ரூ.6.40 ஆகவும், விசைத்தறி கேஸ்மெண்ட் ரகத்திற்கு நெசவுக் கூலி மீட்டருக்கு ரூ.5.60லிருந்து ரூ.6.16 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
* கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் ரகங்களில் புதுமையான ரகங்களை அறிமுகப்படுத்த ரூ.1.55 கோடி நிதி உதவி வழங்கப்படும்.
* வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின்கீழ், கைத்தறி மற்றும் பெடல் தறி சேலைகளுக்கான நெசவுக்கு முந்தைய கூலி ரூ.26.67லிருந்து ரூ.28 ஆகவும், கைத்தறி மற்றும் பெடல் தறி வேட்டிகளுக்கான நெசவுக்கு முந்தைய கூலி ரூ.12.36 லிருந்து ரூ.13 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
* கைத்தறி துணி ரகங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் 60 திறன்மிகு நெசவாளர் விருதுக்கான பரிசுத் தொகை முதல் பரிசு ரூ.10,000லிருந்து ரூ.25,000 ஆகவும், இரண்டாம் பரிசு ரூ.6,000லிருந்து ரூ.15,000 ஆகவும் மற்றும் மூன்றாம் பரிசு ரூ.4,000லிருந்து ரூ.10,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
* காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஜரிகை ஆலையில் X R F ஜரிகை பகுப்பாய்வு இயந்திரம் ரூ.25 லட்சம் மதிப்பில் நிறுவப்படும்.
The post கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு: அமைச்சர் காந்தி அறிவிப்பு appeared first on Dinakaran.