கோவை, ஜன. 25: தமிழ்நாடு அரசின் உத்தரவின்பேரில், நடப்பாண்டில் 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் 4வது சனிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட உள்ளன. இதையொட்டி, பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் மற்றும் அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. கோவை மாவட்டத்திலும் இம்முகாம் முழு வீச்சில் நடத்தப்பட உள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் களம் இறங்க உள்ளனர். நடப்பு மாதத்திற்கான சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் இன்று (சனிக்கிழமை) காலை நடக்கிறது. இது பற்றி மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறுகையில், ‘‘பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இம் முகாம் நடைபெறும்.
பிளாஸ்டிக் கழிவு அகற்றி, தூய்மைப்படுத்தும் பணியில் அனைத்து தரப்பினரும் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் மற்றும் வியாபார பெருமக்கள் அனைவரும் அரசால் தடை செய்யப்பட்ட, ஒரு முறை மட்டும் உபயோகப்படுத்திவிட்டு, தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்களை பயன்படுத்த வேண்டும்’’ என்றார்.
The post கோவை மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்ற இன்று சிறப்பு முகாம் appeared first on Dinakaran.