திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை 4 மாதங்களைத் தாண்டி தற்போதும் பெய்து வருகிறது. இந்த வருடம் தென்மாவட்டங்களை விட கோழிக்கோடு, மலப்புரம், காசர்கோடு, கண்ணூர், வயநாடு உள்பட வடமாவட்டங்களில் தான் மழைப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.
இதற்கிடையே தொடர் மழை காரணமாக பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பல அணைகளும் நிரம்பி உள்ளன. இந்தநிலையில் மேலும் 4 நாட்களுக்கு கேரளாவில் பல்வேறு பகுதிகளில் மழை நீடிக்கும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. அதன்படி இன்று மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கும், நாளை இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கும், 17ம் தேதி எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் உள்பட 9 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பாலக்காடு, வயநாடு, கோழிக்கோடு உள்பட இன்று 6 மாவட்டங்களுக்கும், நாளை ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், கண்ணூர் உள்பட 6 மாவட்டங்களுக்கும், 17ம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா உள்பட 5 மாவட்டங்களுக்கும், 18ம் தேதி கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post கேரளாவில் மேலும் 4 நாட்களுக்கு பலத்த மழை appeared first on Dinakaran.