கேரளா: கோவில் திருவிழாவில் யானைகள் மோதல்: இடையில் சிக்கி 3 பக்தர்கள் பலி

1 week ago 5

கோழிக்கோடு,

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இன்று மாலை திருவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு கோகுல், பீதாம்பரம் ஆகிய வளர்ப்பு யானைகள் நெற்றி பட்டம் கட்டியவாறு ஊர்வலமாக அழைத்து வந்தனர். தொடர்ந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

அப்போது வளர்ப்பு யானைகளான கோகுல், பீதாம்பரம் இடையே திடீரென ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. இதனால் கோவிலுக்கு வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலறியடித்து ஓடினர். இதனால் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்வதறியாது திகைத்தனர். யானைகளை கட்டுப்படுத்த பாகன்கள் முயன்றனர். இருப்பினும் யானைகள் கடுமையாக மோதிக்கொண்டன.

யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், கோவில் அலுவலகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில், யானைகளுக்கு இடையே சிக்கி கெயிலாண்டி பகுதியைச் சேர்ந்த லீலா (வயது65), அம்மு குட்டியம்மா (70), ராஜன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோழிக்கோடு போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். மேலும், படுகாயம் அடைந்த 30க்கும் மேற்பட்டோரையும் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் 5 பேரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து கோழிக்கோடு மாவட்ட உயர் அதிகாரிகள், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவில் யானைகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Read Entire Article