கேரளா கோவிலில் பயங்கர தீ விபத்து: நிர்வாக கமிட்டியினர் மீது வழக்குப்பதிவு

2 months ago 14

காசர்கோடு,

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் அருகே அஞ்சுதம்பலம் வீரராகவ கோவில் காளியாட்ட திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று திருவிழாவின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. அதைக்காண குழந்தைகள், பெரியோர்கள் என ஏராளமானோர் கோவில் வளாகத்தில் திரண்டிருந்தனர். அப்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளில் இருந்து தீப்பொறி பறந்து, அருகில் இருந்த பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் விழுந்துள்ளது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் மொத்தமாக வெடித்து சிதறின.

கோவிலுக்கு அருகிலேயே இந்த விபத்து ஏற்பட்டதால் அங்கு கூடியிருந்த மக்கள் பலரும் விபத்தில் சிக்கினர். இந்த வெடிவிபத்தில் 154 பேர் காயமடைந்துள்ளனர். 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 12 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக காசர்கோடு, கண்ணூர் மற்றும் மங்களூரு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். மீட்பு பணிகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தினார்.

இந்நிலையில் கேரளா கோவிலில் பயங்கர தீ விபத்து தொடர்பாக அந்த கோவில் நிர்வாக கமிட்டியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி வாணவேடிக்கை நடத்தியதற்காகவும், வழிகாட்டுதல்களை மீறியதற்காகவும் 8 கோவில் கமிட்டியினர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கவனக்குறைவால் பட்டாசு சேமிப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article