
சென்னை,
கோடை காலத்தில் வெப்பம் வாட்டி வதைப்பதால், வெயிலில் இருந்து தப்பிக்க மக்களிடையே ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. வசதி படைத்தவர்கள் மட்டும் இன்றி நடுத்தர வசதி கொண்டவர்கள் வீட்டிலும் தற்போது ஏசி இருப்பதை பார்க்க முடிகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக ஏசி விற்பனை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு, இந்தியாவில் 1 கோடியே 40 லட்சம் ஏ.சி.கள் விற்பனை ஆகியுள்ளன. வரும் ஆண்டுகளில் ஏ.சி. விற்பனை 9 மடங்கு உயரும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதே சமயத்தில், ஏ.சி. பயன்பாடு அதிகரிக்கும்போது, அது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை அதிகரிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஏ.சி.யில் உள்ள குளிர்பதன பொருள், நிலக்கரியை எரிப்பதால் கிடைக்கும் மின்சாரம் ஆகியவை உலக வெப்பமயமாதலுக்கு காரணமாக இருக்கின்றன. ஏ.சி. வெளியிடும் வெப்பக்காற்றால் நகர்ப்புற வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.