
திருச்சூர்,
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அதிரப்பள்ளி மழக்கப்பாறை சாலையில் வன பகுதி வழியே வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, கபாலி என்ற காட்டு யானை கார் ஒன்றை வழிமறித்து நின்றது.
அது வருவது தெரிந்ததும் காரில் இருந்த பயணிகள், முன்னெச்சரிக்கையாக வாகனத்தில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டனர்.
அந்த பகுதி வழியே வாகனத்தில் சென்ற சிலர், அவர்களுடைய வாகனங்களை வழியிலேயே பாதுகாப்பான தூரத்தில் நிறுத்தி விட்டு, யானையையும், அதன் செயலையும் வீடியோவாக படம் பிடித்தனர். அந்த காரை, யானை தும்பிக்கையால் முட்டி தள்ளியதில், சாலையின் நடுவில் இருந்து ஓரத்திற்கு அந்த கார் நகர்ந்து சென்றது.
இதனால், அதனை பார்த்து கொண்டு இருந்தவர்கள் அச்சத்தில் உறைந்தனர். காருக்குள் யாரும் இல்லை. இதனால், பெரிய அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்ச்சியாக, அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.