கேரளத்தில் இருந்து வாகனங்களில் கொண்டுவந்து நெல்லை அருகே குவியல் குவியலாக கொட்டப்படும் கேன்சர் மருத்துவ கழிவுகள்: தொற்று நோய் பரவும்முன் நடவடிக்கை எடுக்கப்படுமா?

4 weeks ago 6


பேட்டை,: நெல்லை அருகே விவசாய நிலப்பகுதியில் கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. கேன்சர் மருத்துவ கழிவுகள் என்று அதில் குறிப்பிடப்பட்டிருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நெல்லை அருகே சுத்தமல்லி பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து கேரளவிற்கு குண்டு கல் உள்ளிட்ட கனிம வளங்கள் டாரஸ் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இங்கிருந்து கனிம வளங்களை கேரளாவிற்கு கொண்டு செல்லும் லாரிகள் காலி வாகனமாக திரும்பி வருவது வழக்கம். இந்நிலையில் காலியாக வரும் வாகனங்களில் கேரள மாநில கேன்சர் மருத்துவமனை முகவரி கொண்ட கேன்சர் மருத்துவக் கழிவுகள், உணவு கழிவுகள், குளிர்பான டப்பாக்கள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் இந்த லாரிகளில் கணிசமான வாடகையில் ஏற்றி வரப்பட்டு நெல்லை மாவட்டம் சுத்தமல்லி சுற்று வட்டார பகுதிகளில் மெயின் ரோட்டில் இரவு நேரங்களில் கொட்டி விட்டு செல்கின்றனர்.

சில சமயங்களில் அந்த கழிவுகளில் டீசலை ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு செல்வதும் வழக்கம். தற்போது பெய்து வரும் மழையால் தீ வைத்து எரிக்க முடியாத சூழ்நிலை நிலவுவதால் கேரள மாநில கேன்சர் கழிவுகள் ஆங்காங்கே குவியல் குவியலாய் கொட்டப்பட்டு மலை போல் குவிந்து கிடக்கின்றன. கேரள கழிவுகள் கொட்டப்பட்டு கிடக்கும் விவசாய நிலத்தின் உரிமையாளர்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிப்பதோடு, தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவிற்கும் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கனிம வளங்களை ஏற்றிச் செல்ல வரும் லாரிகள் தமிழகம், கேரளா எல்லை பகுதியில் உள்ள போலீசாரை சிறப்பாக கவனித்துக் கொள்வதால் தமிழகத்தில் கொட்டப்படும் கழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதே நிலை நீடித்தால் கேரள மாநிலத்தின் குப்பைகளை சேமிக்கும் குப்பை தொட்டியாக நெல்லை பகுதிகள் மாறும் எனத்தெரிகிறது. எனவே, கேரளத்தில் இருந்து வாகனங்களில் கொண்டு வந்து பேட்டை அருகே குவியல்குவியலாக மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுத்துநிறுத்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுமா? என அனைத்துத்தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

The post கேரளத்தில் இருந்து வாகனங்களில் கொண்டுவந்து நெல்லை அருகே குவியல் குவியலாக கொட்டப்படும் கேன்சர் மருத்துவ கழிவுகள்: தொற்று நோய் பரவும்முன் நடவடிக்கை எடுக்கப்படுமா? appeared first on Dinakaran.

Read Entire Article