'கேப்டனும், பயிற்சியாளரும் கொடுத்த சுதந்திரம் உற்சாகத்தை அளித்தது' - ஹர்திக் பாண்ட்யா

1 month ago 13

ஐதராபாத்,

கடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த தொடரில் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்தியாவின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் பதவியேற்ற பின்னர் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும், துணை கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டனர். ஹர்திக் பாண்ட்யாவின் உடற்தகுதி காரணமாகவே அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனால் சூர்யகுமார் யாதவ் மீது ஹர்திக் பாண்ட்யாவுக்கு அதிருப்தி ஏற்படலாம் என பலர் கூறி வந்தனர்.

ஆனால், இதுபோன்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கேப்டன் சூர்யகுமார் யாதவும், பயிற்சியாளர் கம்பீரும் அணியினருக்கு கொடுத்த சுதந்திரம் தங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததாக ஹர்திக் பாண்ட்யா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற டி20 ஆட்டத்தில் வங்காளதேச அணியை 133 ரன்கள் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வங்காளதேசத்திற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் சதம் விளாசி அசத்திய சஞ்சு சாம்சன், ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

தொடர் நாயகன் விருதை ஹர்திக் பாண்ட்யா பெற்றார். அப்போது பேசிய அவர், "கேப்டனும் பயிற்சியாளரும் கொடுத்த சுதந்திரம் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அந்த உற்சாகம் அனைத்து வீரர்களிடமும் எதிரொலித்தது. இந்த விளையாட்டை உங்களால் ரசிக்க முடிந்தால், அதுவே உங்களிடமிருந்து அதிகபட்சத்தைப் பெறுவதற்கான சிறந்த வழியாகும். எல்லோருடைய வெற்றியையும் எல்லோரும் கொண்டாடும்போது, இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்" என்று தெரிவித்தார். 

Read Entire Article