கேப்டனாக இல்லாவிட்டாலும் தோனி சிறந்த வழிகாட்டி மற்றும் தலைவர் - பாண்டிங் புகழாரம்

2 months ago 13

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் மகேந்திரசிங் தோனி. ஐ.பி.எல். தொடரின் முதல் சீசனிலிருந்தே சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளார். அதனால் வெற்றிகரமான ஐ.பி.எல் கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் தற்போது 42 வயதை கடந்துள்ளார். அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வருடம் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த அவர் சாதாரண விக்கெட் கீப்பராக விளையாடினார்.

அத்துடன் அவர் பேட்டிங்கில் கடைசி சில ஓவர்களில் மட்டுமே களமிறங்கினார். அந்த வாய்ப்பிலும் அதிரடியாக விளையாடிய தோனி இறுதி ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். இதனிடையே அடுத்த ஐ.பி.எல். தொடருக்கான சென்னை அணியில் தோனி அன்கேப்டு வீரராக தக்க வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஐ.பி.எல். தொடரே அவரது கடைசி தொடராக என்று அனைவரும் நினைத்த வேளையில் அடுத்த சீசனிலும் அவர் விளையாட உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது அனுபவும் அறிவும் நிச்சயம் சென்னை அணிக்கு கை கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்நிலையில் தோனி அணியில் கேப்டனாக இல்லாவிட்டாலும் அவர் சிறந்த தலைவர் மற்றும் வழிகாட்டி என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், " இரண்டு வருடங்களுக்கு முன்பு தோனி மோசமான ஐ.பி.எல். சீசன்களை கொண்டிருந்தார். ஆனால் கடந்த ஆண்டு அவர் பழைய தோனியாக திரும்பி வந்து போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தினார். சிஎஸ்கே அணி அவரை முழு சீசனுக்கும் பெற முடியாமல் போகலாம். ஆனால் அவரிடமிருந்து சிறந்ததை பெறுவதற்கு, அவருக்கு தேவையான ஓய்வு கொடுத்து அணி நிர்வாகம் அவரை பயன்படுத்தும். அவர் எந்த அணியில் இருந்தாலும் கேப்டனாக இல்லாவிட்டாலும் கூட, சிறந்த தலைவராகவும் சிறந்த வழிகாட்டியாகவும் இருப்பார்.

தற்போது சிஎஸ்கே அணியில் விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் அவர் மிகவும் முக்கியமானவர். அவர் களத்திற்கு வெளியே இருந்தும் அணிக்கு தேவையானதை கொண்டு வருவார். அவர் இப்பொழுதும் கடைசி 20 பந்துகளில் பேட்டிங் செய்து போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அவர் இப்படி விளையாடுவதன் மூலமும் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும் என்று காட்டுகிறார்" என கூறினார். 

Read Entire Article