கேது தோஷ நிவர்த்தி.. சீர்காழி பகுதியில் சிறப்பு பெற்ற பிரார்த்தனை தலம்

2 days ago 2

சோழவள நாட்டில் உள்ள சிறப்புவாய்ந்த ஆலயங்களில் ஆதி கேது தலமாக போற்றப்படும் செம்பங்குடி நாகநாத சுவாமி ஆலயமும் ஒன்று. இக்கோவிலின் இறைவன் நாகநாத சுவாமி. அம்பாள் கற்பூரவல்லி தாயார். இங்கு ஆதி கேது தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.

சிவந்த மனித உடலும் பாம்பின் தலையும் கொண்ட கேதுவின் வடிவம் இங்கு குடிகொண்டதால் இத்தலம் செம்பாம்பினன்குடி என்று முன்னர் அழைக்கப்பட்டது. இதுவே மருவி செம்பங்குடி என்றாகி உள்ளது. அருணாசலக் கவிராயரின் சீர்காழி தலபுராணத்தில் இப்பதி செம்பாம்பினன்குடி என்றும் கேதுபுரம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருநாவுக்கரசர் அருளிய ஆறாம் திருமுறையில், மனித இடர்களைப் போக்கும் தலங்களுள் ஒன்றாக விலங்கும் இத்தலத்தை வைப்புத்தலமாக போற்றியுள்ளார்.

கேது தோஷம் மற்றும் நாக தோஷத்தால் அவதிப்படுபவர்கள் தோஷ நிவர்த்தி பெறுவதற்காக பிரார்த்தனை செய்ய வேண்டிய சிறந்த தலமாக இந்த தலம் விளங்குகிறது. கருவறையில் சிறிய திருமேனியுடன், ஸ்ரீ நாகநாத சுவாமி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆதியில் கேது பூஜித்த லிங்கம் என்பதால் கேதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த இறைவனை வழிபட்டால் பல ஜென்ம நாக தோஷங்களையும் நொடிப்பொழுதில் நீக்கி சுகத்தை அருள்வதாக நம்பிக்கை.

இக்கோவிலில் தினமும் ஒருகால பூஜை நடத்தப்படுகிறது. ஆலய மெய்க்காவலர் உதவியுடன் பகல் வேளையில் எப்போது வேண்டுமானாலும் சுவாமி தரிசனம் செய்யலாம். சுவாமிக்கும் அம்பாளுக்கும் பசும் பாலால் அபிஷேகம் செய்து சிவந்த அல்லி மலர்களால் அர்ச்சனை செய்கின்றனர். நைவேத்தியமாக புளியோதரை செய்து படைக்கின்றனர். இவ்வாறு பிரார்த்தனை செய்வதால், முன் ஜென்மங்களில் ஏற்பட்ட நாக தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம். அதோடு சிறந்த அறிவையும், பேராற்றலையும் பெற்றிடலாம் என்பது நம்பிக்கை.

சிவபக்தியில் சிறந்தும், மோட்ச காரகனாகவும் திகழும் இத்தல ஆதி கேதுவை எமகண்ட வேளையில் அபிஷேகம் செய்து, பல வண்ணங்கள் கொண்ட ஆடையை அணிவித்து, சிவந்த நிற புஷ்பங்களால் அர்ச்சனை செய்து, கொள்ளுப் பொடி சாதம் நைவேத்தியம் படைத்து வழிபட்டு வந்தால் சகலவித பாவங்களில் இருந்தும் விடுபடலாம், சுகபோகங்களோடு சகல சவுபாக்கியங்களையும் பெற்றிடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகரில் இருந்து திருமுல்லைவாசல் செல்லும் பாதையில் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது செம்பங்குடி. 

Read Entire Article