கெலமங்கலம் பகுதியில் யானைகள் அட்டகாசம்: சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

4 months ago 18

தேன்கனிக்கோட்டை: கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வந்துள்ள 100க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் முகாமிட்டுள்ளன. அதில் ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்கம், சானமாவு வனப்பகுதி என நான்கு பிரிவுகளாக பிரிந்து முகாமிட்டு ராகி, துவரை, அவரை, தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகின்றன. தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில் 20 யானைகள், பேவநத்தம் வனப்பகுதியில் 40 யானைகள் என 60 யானைகள் உள்ளன. தினமும் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து ராகி, துவரை, அவரை, தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டிருந்த கிரி, குள்ளி என்ற இரு யானைகள் கடந்த இரு தினங்களாக கெலமங்கலம் பகுதியை நோக்கி சென்றுள்ளது.

கெலமங்கலம் அருகே ஜெக்கேரி காடு, உத்தனப்பள்ளி, டி.கொத்தப்பள்ளி, போடிசிப்பள்ளி ஆகிய கிராமங்களில் புகுந்து ராகி, நெல் வயல்கள், தாக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகின்றன. காலை மாலை நேரங்களில் கிராம பகுதியில் பட்டாசு வெடித்தாலும் பயம் இன்றி பயிர்களை சாப்பிட்டு வருவதால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். தொடர்ந்து யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், அட்டகாசம் செய்து வரும் யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கெலமங்கலம் பகுதியில் யானைகள் அட்டகாசம்: சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article