மதுரை: கூல்-லிப் அட்டையில் மண்டை ஓடு படங்கள் அச்சிட வேண்டும் என்றும், விழிப்புணர்வு குறித்து அரசுகள் தரப்பில் பதிலளிக்குமாறும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கஞ்சா, புகையிலை போன்ற பொருட்களை விற்பனை செய்த வழக்குகளில் கைதானவர்கள், தலைமறைவாக இருப்பவர்கள் தாக்கல் செய்த ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களை ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி விசாரித்து வருகிறார். இந்த மனுக்கள் நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, டி.பரதசக்கவர்த்தி பிறப்பித்த உத்தரவு: மெல்லும் வகையிலான போதை பொருட்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. சில மாநிலங்கள் அதை பின்பற்றி வரும் நிலையில், அந்த உத்தரவுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
கூல்-லிப் தயாரிப்பு நிறுவனங்கள் கோட்பா விதிகளுக்கு உட்படும் என்றால், அதில் அபாயத்தை குறிப்பிடும் மண்டை ஓடு அடையாளம் ஏன் அச்சிடப்படவில்லை? அதோடு அதன் மீது இருக்கும் எச்சரிக்கை வாசகமாக, ‘டுபாக்கோ யூசர்ஸ் டை யங்கர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாசகத்தை ‘புகையிலை பயன்படுத்துபவர்கள் இளமையிலேயே இறக்கிறார்கள்’ எனப் பொருள் கொள்ளாமல், கூல் லிப் சாப்பிட்டால் ‘இறக்கும் போதும் இளமையாக இறக்கலாம்’ எனத் தவறாக இளம் தலைமுறையினர் புரிந்து கொண்டால், அது விளம்பரம் போல் ஆகிவிடும். எனவே, கோட்பா சட்ட விதி 7-ன் கீழ் புகையிலை போதைப்பொருள் பாக்கெட்டுகளில் அபாயத்தை குறிப்பிடும் மண்டை ஓடு படம் அச்சிடப்பட வேண்டும். இதுதொடர்பாக குட்கா நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும்.
மேலும் போதைப்பொருள் பயன்பாட்டை இளம்தலைமுறையினர் குறைத்துக் கொள்ள வேறு என்ன மாதிரியான எச்சரிக்கைகள், விழிப்புணர்வு வாசகங்கள் அட்டைகளில் இடம்பெற செய்யலாம் என்ன மாதிரியான ஆலோசனைகளை வழங்கலாம் என்பது தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைத்தார்.
The post கூல்-லிப் அட்டையில் மண்டை ஓடு படம்: அச்சிடுவதற்கு ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.