கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நிறைவு; டிஆர்ஓ தலைமையில் பரிசு

3 hours ago 3

கூடலூர் : கூடலூர் மார்னிங் ஸ்டார் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை துவங்கி 3 நாட்கள் நடை பெற்ற வாசனை திரவிய கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. முன்னதாக, கண்காட்சியை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன், அரசு கொறடா ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த கண்காட்சியில் தோட்டக்கலை, வனத்துறை, உள்ளாட்சி துறை, தேயிலை வாரியம், இயற்கை விவசாயிகள் சங்கம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

தோட்டக்கலைத்துறையின் 80 கிலோ வாசனை திரவியங்களால் உருவாக்கப்பட்ட பழமையான குன்னூர் மலை ரயில் நிலையம், கூடலூர் நகராட்சியின் கழிவு பிளாஸ்டிக்குகளால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் அரக்கன், வனத்துறையின் வன உயிரின கண்காட்சி உள்ளிட்டவை பொது மக்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் உள்ளூர் மக்கள் கலந்து கொண்ட கலை கலாச்சார நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், விளையாட்டு போட்டிகள், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் மீட்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி, ராட்டினம், மினி ரயில், சாகச விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் கண்காட்சியில் இடம் பெற்றன.

நிறைவு நிகழ்ச்சியில் சிறந்த கண்காட்சி அரங்குகளுக்கு கேடயம் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள், கண்காட்சி சிறப்பாக நடைபெற உறு துணையாக இருந்த வருவாய் துறையினர், தோட்டக்கலைத் துறையினர் உள்ளிட்டோருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.

சிறந்த அரங்குக்கான முதல் இடம் தோட்டக்கலைத்துறைக்கும், இரண்டாவது இடம் கூடலூர் நகராட்சி அரங்கு, மூன்றாவது இடம் வனத்துறை அரங்கிற்கும் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரங்குகளை பார்வையிட்டு கேடயங்கள், பரிசுகள் வழங்கி விழாவை நிறைவு செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கூடலூர் ஆர்டிஓ பொறுப்பு சங்கீதா (சார் ஆட்சியர்), தோட்டக்கலை துணை இயக்குனர் நவநீதா, கூடலூர் உதவி இயக்குநர் அனிதா, கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளா, நேர்முக உதவியர் சரவணகுமார், தாசில்தார் முத்துமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உள்ளூர் பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று ராட்டினம், மினி ரயில் மற்றும் சாகச விளையாட்டுகள் உள்ளிட்ட பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கண்காட்சி மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

The post கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நிறைவு; டிஆர்ஓ தலைமையில் பரிசு appeared first on Dinakaran.

Read Entire Article