திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியொட்டி இன்று 2வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 8.47 மணிக்கு தொடங்கி, இன்று இரவு 10.43 மணிக்கு நிறைவடைகிறது. நேற்று அதிகாலை முதல் இரவு 10 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் பக்தர்கள் தொடர்ச்சியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மாலை 6 மணிக்கு பிறகு பக்தர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்காக உயர்ந்தது. இரவு முழுவதும் விடிய விடிய சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கி.மீ. தூரமும் பக்தர்கள் வெள்ளமாக காணப்பட்டது. பக்தர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. 2வது நாளாக இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதிகாலை 4 மணிக்கு கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மாடவீதி வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். சுட்டெரித்த கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மேலும் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து நேற்று முதல் 4,533 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இவை நாளை காலை 7 மணி வரை இயக்கப்படுகிறது. கிரிவலம் முடித்த பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையத்தில் குவிந்தனர். விழுப்புரம், காட்பாடி வழியாக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் கூட்டம் அலைமோதியது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பர்வதமலை;
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் தென்கயிலாயம் என அழைக்கப்படும் 4,560 அடி உயர பர்வதமலை உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜூேனஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு பவுர்ணமி, அமாவாசை தினங்களில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி சித்ரா பவுர்ணமியொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் பர்வதமலைக்கு வந்தனர். அவர்கள் நேற்று மாலை முதல் விடிய விடிய மலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மல்லிகார்ஜூனேஸ்வரர், பிரம்மராம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
The post திருவண்ணாமலையில் 2வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்: 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.