அரியலூர்: அரியலூர் அருகே மகளை கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்று தந்தையும் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் ரவி(50). ஆட்டோ டிரைவர் இவரது மனைவி செல்வி(45). இவர்களது மகள்கள் ரஞ்சனி(19), சந்தியா(17). இதில் ரஞ்சனி பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார். தற்போது வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வில் சந்தியா 600க்கு 520 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இருந்தார்.
இந்நிலையில் ரவி அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அங்கு அவரது மனைவி செல்வி மற்றும் மகள் ரஞ்சனி வீட்டு வேலைகளை செய்து வந்தனர். சந்தியா உணவு சமைத்து தாய், அக்காவுக்கு தந்தையிடம் கொடுத்து அனுப்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று மதிய உணவு நீண்ட நேரமாகியும் வீட்டிலிருந்து வராததால் செல்வி வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் சந்தியா இறந்து கிடந்தார். அருகிலேயே தந்தை ரவி தூக்கில் சடலமாக தொங்கினார். இதை பார்த்து இருவரும் கதறினர்.
தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தியாவின் கழுத்தில் கயிற்றால் இறுக்கிய தடயம் இருந்தது. இதனால் ரவி மகளை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்று தற்கொலை செய்தது தெரியவந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மகள் மீது ரவி அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். சந்தியாவும் செல்லமாக தந்தையிடம் பதிலுக்கு பதில் பேசுவாராம். இந்நிலையில் சந்தியா தொடர்ந்து செல்போன் பார்த்து வந்தார். நேற்றும் சமைக்காமல் செல்போன் பார்த்துக்கொண்டே இருந்தார். இதை பார்த்த ரவி மகளிடம் சமையல் செய்யாமல் செல்போன் பார்த்து கொண்டிருந்தால் எப்படி அம்மா, அக்காவுக்கு சாப்பாடு கொடுப்பது என கேட்டு கண்டித்துள்ளார்.
அப்போது மகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கோபமடைந்த ரவி மகளை கழுத்தை இறுக்கி கொன்றுள்ளார். பாசம் கொட்டி வளர்த்த மகளை ஆத்திரத்தில் கொன்றதால் மனமுடைந்த ரவி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர்களது இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்தசம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவத்துக்கு செல்போன் தான் காரணமா அல்லது வேறு எதுவும் பிரச்னையா என ரவியின் மனைவி மற்றும் மூத்த மகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கழுத்தை இறுக்கி மகளை கொன்று தந்தை தற்கொலை appeared first on Dinakaran.