கூக்கல்தொரை, மசகல் ஆறு தூர்வாரப்படுமா?

3 months ago 6

*விவசாயிகள் எதிர்பார்ப்பு

கோத்தகிரி : கோத்தகிரி அருகே உள்ள மசகல், கூக்கல்தொரை ஆற்றை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை, மசகல் மற்றும் அதனை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இங்கு மலைக்காய்கறிகளான உருளைக்கிழங்கு, முட்டை கோஸ், கேரட், பீட்ரூட், மலைப்பூண்டு மற்றும் இங்கிலீஸ் காய்கறிகளான புருக்கோலி போன்ற காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.

இங்கு பயிரிடப்படும் அனைத்து விவசாயிகளின் விளைநிலங்களுக்கும், தீட்டி மலைப்பகுதியில் இருந்து வரும் நீர், உயிலட்டி நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் நீர் மசகல், கூக்கல்தொரை ஆற்றின் வழியாக மசகல், கூக்கல்தொரை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் வழியாக செல்லும் நிலையில் இந்த நீரை தங்களின் விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, இந்த நீராதாரத்தை மட்டுமே விவசாயிகள் தங்களது விவசாய தோட்டத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, கூக்கல்தொரை பகுதியில் உள்ள ஆறு முற்றிலும் தூர்வாரப்படாமல் புதர் மண்டி காணப்படுகிறது. மேலும், வரும் கோடை மழையின் போது மழை பெய்யும் நேரத்தில் நீர்வரத்து அதிகரித்து விளைநிலங்களுக்குள் மழை நீர் புகுந்து விளைநிலங்களில் பயிரிட்டப்பட்ட பயிர்கள் சேதமாகும் நிலை ஏற்ப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மசகல் முதல் கூக்கல்தொரை வரை சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆற்றின் நடுவில் அதிகமாக செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால், அப்பகுதியில் விவசாயத்திற்கு ஏற்ற நீர்வரத்து கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, மாவட்ட நிர்வாகம் உட்பட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளிடமும் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆற்றை தூர்வார நிதி இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஒருகட்டத்தில் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் ஆற்றை நாங்கள் சொந்த செலவில் தூர்வாரி கொள்கிறோம் என்று ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்களை பயன்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டால் அதற்கு அனுமதி தர மறுக்கிறார்கள் என விவசாயிகள் கூறுகின்றனர்.

விவசாயத்தை மட்டுமே வாழும் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என புலம்புகின்றனர். எனவே, போர்கால அடிப்படையில் மசகல் முதல் கூக்கல்தொரை வரை உள்ள சுமார் 2 கிலோமீட்டர் வரை உள்ள ஆற்றை தூர்வார மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கூக்கல்தொரை, மசகல் ஆறு தூர்வாரப்படுமா? appeared first on Dinakaran.

Read Entire Article