குழந்தைக்காக ஆரம்பித்தது… முழு நேர தொழிலாகவே மாறியது!

3 weeks ago 6

நன்றி குங்குமம் தோழி

ஒரு பேரிடர் ஏற்பட்ட பிறகு தான் விழிப்புணர்வுடன் செயல்பட ஆரம்பிப்போம். கொரோனா தொற்றும் உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் ஒழுக்கத்தினை கற்றுக் கொடுத்துள்ளது. இதனை நாம் மட்டுமில்லாமல் நம்முடைய குழந்தைகளுக்கும் சிறு வயதில் இருந்தே கற்பிக்கத் தொடங்க ஆரம்பித்துவிட்டோம். அந்த வரிசையில் தன் குழந்தைக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் உணவுகளை கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தால் கேக் மற்றும் குக்கீஸ்களை செய்யத் துவங்கியவர் இப்போது அதையே தன் தொழிலாக மாற்றியுள்ளார் பிரியா. இவர் தன் குழந்தைக்காக ‘பிரியாஸ் ஹோம்மேட் கேக்ஸ்’ என்ற பெயரில் வீட்டில் இருந்தபடியே பல சுவையான கேக்ஸ் மற்றும் குக்கீஸ்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

‘‘சொந்த ஊர் ஈரோடு. பிறந்தது, படிச்சது எல்லாம் அங்குதான். அப்பா ஆட்டோ டிரைவரா வேலை பார்த்தார். அம்மா ஓய்வு பெற்ற அரசு ஊழியர். நான் பொறியியல் படிச்சேன். அதன் பிறகு இரண்டு வருஷம் தனியார் துறையில் வேலை பார்த்தேன். அம்மா ஆரம்பத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தாங்க. பிறகு குரூப் 2 தேர்வு எழுதி அரசு வேலையில் இருந்தாங்க. அவங்களை போல நானும் அரசு வேலையில் சேர விரும்பினேன். இரண்டு வருடம் கடினமாக படிச்சேன். குரூப் 2 தேர்வு எழுதி அதில் தேர்ச்சியும் பெற்றேன்.

ஆனால் தேர்ச்சிப் பெற்றவர்களில் ஒரு பேட்ச்சிற்கு மட்டும்தான் போஸ்டிங் போட்டாங்க. மற்றவர்களுக்கு போஸ்டிங் தராமல் அடுத்தக்கட்ட தேர்வு நடத்த ஆரம்பிச்சிட்டாங்க. அது எனக்குள் பெரிய அளவில் மன உளைச்சலை ஏற்படுத்தியதால் எந்த வேலையிலும் என் மனம் ஈடுபடவில்லை. இதற்கிடையில் கல்யாணம், குழந்தை என்று என் வாழ்க்கை நகர ஆரம்பித்தது.
குழந்தைக்கு ஒரு வயதான போது, வீட்டிற்கு வருபவர்கள் குழந்தை இருப்பதால், ஏதாவது தின்பண்டங்கள் வாங்கி வந்து தருவார்கள். தரமான பொருளாக இருந்தாலும், கடை பலகாரங்கள் கொடுத்து பழக வேண்டாம் என்று நினைத்தேன்.

அதே சமயம் குழந்தைக்கும் மற்ற உணவுகளை கொடுக்கவும் ஆரம்பிக்கணும் என்பதால், அதே பிஸ்கெட்களை நான் வீட்டிலேயே தயாரிக்க துவங்கினேன்’’ என்றவர் பேக்கிங் பற்றி எந்த அடிப்படை விஷயங்களும் தெரியாமல் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டுதான் முதலில் பிஸ்கெட்களை தயாரித்துள்ளார்.‘‘எனக்கு பேக்கிங் பற்றி எதுவுமே தெரியாது. வீட்டில் மைக்ரோ ஓவனும் இல்லை. குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என்பதால் கோதுமை, நாட்டுச்சர்க்கரை மற்றும் வெண்ணெய் மட்டும் சேர்த்து குக்கரில்தான் முதலில் பிஸ்கெட்களை செய்தேன். நன்றாக வந்தது, குழந்தைக்கும் பிடிச்சிருந்தது.

நான் வீட்டில் செய்வதைப் பார்த்து பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கேட்க ஆரம்பிச்சாங்க. அவங்களுக்கும் கொடுக்க துவங்கினேன். அந்த சமயத்தில்தான் பாப்பாவிற்கு முதல் வருட பிறந்த நாள் வந்தது. நான் கடைகளில் கேக் வாங்கி கொடுக்கக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்ததால், அந்த வருடம் கேக் இல்லாமல்தான் பிறந்தநாளைக் கொண்டாடினோம். அடுத்த வருடம் நானே வீட்டில் தயாரிக்க முடிவு செய்தேன்.

கோதுமை மாவு, வெண்ணெய், தயிர், சர்க்கரை எல்லாம் சேர்த்து ஒரு கேக் செய்ேதன். கடைகளில் கிடைப்பது போல் இல்லை என்றாலும் சாப்பிடும் சுவையில் இருந்தது. அதன் பிறகு கேக்கில் பல வெரைட்டி டிரை செய்யலாம்னு யுடியூப் பார்த்து ஒவ்வொன்றாக செய்ய கற்றுக் கொண்டேன். கேக் குறித்து நடைபெறும் சின்னச் சின்ன வர்க்‌ஷாப்பிலும் பங்கு பெற ஆரம்பித்தேன். அப்போதுதான் தெரிந்தது, அவர்கள் அனைவரும் கேக் ஜெல்லினை பயன்படுத்திதான் கேக் தயாரிக்கிறார்கள் என்று.

கேக் ஜெல் என்பது ஒரு வகையான ரசாயனம். இது கேக்கின் அளவினை அதிகரிக்க உதவும். ஆரம்பத்தில் எனக்கு கேக் ெஜல் பற்றி தெரியவில்லை. அதனால் நானும் அதைப் பயன்படுத்திதான் கேக்குகளை தயாரித்து வந்தேன். சாப்பிடும் போது அப்படியே கடைகளில் கிடைக்கும் ஸ்பாஞ்ச் கேக் போல இருந்தது. அதன் பிறகு எதற்காக இதனை பயன்படுத்த வேண்டும் என்று தேடிய போதுதான், அதன் உண்மையான வேலை என்ன என்று தெரியவந்தது. அன்று முதல் நான் கேக் ஜெல்லினை பயன்படுத்துவதில்லை.

நான் கேக் தயாரிப்பதைப் பார்த்து பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் எங்களின் ஃப்ரெண்ட்ஸ் என கேட்க ஆரம்பிச்சாங்க. அப்படித்தான் செய்ய ஆரம்பிச்சேன். அதைப் பார்த்து என் கணவர் இதையே ஏன் ஒரு பிசினசா செய்யக்கூடாதுன்னு கேட்டார். அப்படித்தான் என்னுடைய இந்தத் தொழில் ஆரம்பமாச்சு’’ என்றவர், சமூக வலைத்தளத்தில் கேக் பிசினஸ் குறித்து பதிவுகளை வெளியிட ஆரம்பித்தார். இப்போது அவருக்கு என தனிப்பட்ட வாடிக்கையாளர் வட்டம் அமைத்துள்ளார். ‘‘ஏற்கனவே நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆர்டர் கொடுத்து வந்தாலும், நான் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த பிறகு ஈரோட்டில் மற்ற பகுதியில் இருந்து ஆர்டர் வர ஆரம்பித்தது.

பெரும்பாலும் ஆர்டர் செய்யப்படும் கேக்கிற்கு நான் மைதாதான் பயன்படுத்துகிறேன். கோதுமையின் சுவையை அனைவரும் விரும்பமாட்டார்கள். ஒரு சிலர் மைதா வேண்டாம் என்று சொல்லும் போது அவர்களுக்கு கோதுமை அல்லது மில்லட்சில் செய்து தருகிறேன். கேக்கில் பெரும்பாலும் சர்க்கரை சிரப் சேர்ப்பார்கள். அதற்கு பதில் நான் என்ன ஃபிளேவர் கேக் செய்கிறேனோ அந்த பழச்சாற்றினை சர்க்கரை சிரப்பிற்கு பதில் சேர்க்கிறேன். அதே போல் செரிக்கு பதில் நான் உலர் பழங்களை சேர்க்கிறேன். மேலும் சிலர் சர்க்கரை வேண்டாம்னு சொல்வாங்க. அவங்களுக்கு பேரீச்சை பழத்தை ஊறவைத்து அதன் சிரப்பினை சேர்ப்பேன்’’ என்றார்.

‘‘நான் முறையா பயிற்சி எல்லாம் எடுக்கல. வீடியோ பார்த்துதான் செய்ய துவங்கினேன். அதனால் பல சமயம் சரியான அளவு இல்லாமல் வீணாக்கி இருக்கிறேன். சித்திரம் கைப்பழக்கம்
என்பது போலதான் சமையல் கலையும். அதனால் பல முறை டிரை செய்த பிறகு தான் சரியான பதம் வரும். மேலும் நான் ஒவ்வொரு முறை செய்யும் போது அதன் நிறை குறைகள் சரியாக இருக்கிறதா என்று என் கணவர் மற்றும் மகள்தான் சொல்வாங்க.

அப்படித்தான் சாதாரண ஸ்பாஞ்ச் கேக் முதல் ப்ரவுனி, தீம் கேக், டயர் கேக், டெக்ரேஷன் கேக் என அனைத்தும் ஆர்டரின் பேரில் செய்து தருகிறேன். பொழுதுபோக்கிற்காக ஆரம்பித்தது இப்போது என் முழு நேர தொழிலாகவே மாறிவிட்டது. எல்லாவற்றையும் விட அனைவரின் முகத்தில் சந்தோஷத்தை பார்க்கும் போது மனசுக்கு நிறைவா இருக்கு. மாவினை வெண்ணெய், முட்டையுடன் சேர்த்து அடிச்சு வேக வைச்சா கேக் தயாராகிடும்.

ஆனால் இதில் பல யுக்திகளை சேர்த்து கேக்கிற்கு புது வடிவம் தர வேண்டும். அப்படிப்பட்ட பல வித்தியாசமான கேக்குகளை செய்ய கத்துக்கணும். இதுவரை மில்லட்சில் பெரிய அளவில் நான் கேக் தயாரித்தது இல்லை. அதனால் அதில் செய்யணும். கம்பு, ராகியில் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் செய்யணும். எனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லித் தரணும். அதன் மூலம் பல பெண்களுக்கு ஒரு சிறிய அளவில் வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரணும். இப்போது வீட்டில் இருந்துதான் செய்கிறேன். சிறிய அளவில் கேக் தயாரிக்க யுனிட் ஒன்று அமைக்கணும் என பல திட்டங்கள் உள்ளது’’ என்றார் பிரியா.

தொகுப்பு: ஷம்ரிதி

The post குழந்தைக்காக ஆரம்பித்தது… முழு நேர தொழிலாகவே மாறியது! appeared first on Dinakaran.

Read Entire Article