காரைக்குடி, ஜன.21: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளால் காரைக்குடி மாநகராட்சியில் எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது என மாநகராட்சி மேயர் முத்துத்துரை தெரிவித்தார். தமிழ்நாட்டில் எல்லோருக்கும் எல்லாம் என்ற சீரிய கொள்கையுடன் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், காரைக்குடி மாநகராட்சியை தரம் உயர்த்தியதற்கு மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன்.நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். முதல்வரின் எண்ணற்ற அறிவிப்புகளால் இம்மாநகராட்சியில் மக்களுக்கான எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் உறுதுணையாக இருந்து பெற்றுத்தருகிறார்.
இம்மாநகராட்சியில் மக்களுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் 2331 லட்சத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. அதேபோல் ரூ.3371 லட்சத்தில் விடுபட்ட பகுதிகளில் பாதாளசாக்கடை திட்டப்பணிகள், 21.28 லட்சத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பொதுக்கழிப்பிடம். ரூ.58 லட்சத்தில் கலவை உரக்கிடங்களில் 5 எம்டி உயிரி எரிவாயு கலன் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.619 லட்சத்தில் கழனிவாசல் பகுதியில் தினசரி காய்கறி அங்காடி, ரூ.395 லட்சத்தில் பழைய பஸ் ஸ்டாண்ட் புனரமைத்தல் பணி நடந்து வருகிறது. 42.48 லட்சத்தில் புதிதாக எல்இடி லைட்டுகள் அமைக்கப்படுகிறது. ரூ.368.94 லட்சத்தில் பழைய தெருவிளக்குகளை மாற்றி எல்இடி விளக்குகளாக மாற்றுப்பட்டு வருகிறது.
கல்வி மேம்பாட்டு நிதியில் ராமநாதன் செட்டியார் பள்ளியில் ரூ.68 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடங்கள், கழனிவாசல் நகராட்சி பள்ளியில் 33.50 லட்சத்தில் வகுப்பறை கட்டிடங்கள், ரூ.12 லட்சத்தில் ராமநாதன் செட்டியார் உயர்நிலை பள்ளியில் கழிப்பறை கட்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சி ஆணையர் தலைமையில் அதிகாரிகள் மக்களின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி வருகிறார்கள்.
தவிர அந்தந்த வார்டு மாமன்ற உறுப்பினர்கள் தங்களின் பகுதிகளை தொடர்ந்து பார்வையிட்டு மக்களின் தேவைகளை கேட்டு அதற்கு தகுந்த நிதிகளை பெற்று செயல்படுத்தி வருகிறார்கள். பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து மழைநீர் கால்வாய்களும் போர்கால அடிப்படையில் தூர்வாரப்பட்டுள்ளது. அனைத்து வார்டு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று மக்களின் குறைகளை கேட்டு, தேவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதேடு திட்ட பணிகளை சரியாக நடக்கிறதா என தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது, புதிய திட்டங்களை செயல்படுத்துவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம் என்றார்.
The post முதல்வரின் திராவிட மாடல் ஆட்சியில் காரைக்குடி மாநகராட்சியில் எண்ணற்ற பணிகள்: மேயர் எஸ்.முத்துத்துரை தகவல் appeared first on Dinakaran.