காரைக்குடி, ஜன.21: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி தருவதால் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என எம்எல்ஏ எஸ்.மாங்குடி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளும் சீரிய வளர்ச்சியடைய வேண்டும் என்ற கொள்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.
ஒவ்வொரு தொகுதி வளர்ச்சியிலும் தனி கவனம் செலுத்தி வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினை முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி, சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் எம்.பி, நானும் கூட்டுறவுத்துறை கேஆர்.பெரியகருப்பன் ஒப்புதலோடு நேரடியாக சந்தித்து இப்பகுதிக்கு சட்டக்கல்லூரி, வேளாண் கல்லூரி வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அதனை உடனடியாக நிறைவேற்றி தந்தார்.
தற்போது இக்கல்லூரிகளில் மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வகுப்பறைகள், விடுதிகள் கட்டுமான பணிகளும் நடந்துவருகிறது. அதேபோல் வளர்ந்துவரும் இப்பகுதியை மாநகராட்சியாக அறிவித்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டமன்றத்தில் மக்களுக்கு தேவையான திட்டங்கள் குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனை முதல்வர் உடனடியாக நிறைவேற்றி வருகிறார்.
மக்களின் அடிப்படை தேவையான சாலை, குடிநீர் வசதி செய்யப்பட்டு வருகிறது. பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி, மின்குறைபாட்டை போக்க புதிய டிரான்ஸ்பார்மர்கள் வசதி செய்யப்பட்டு வருகிறது. சாலை வசதியே இல்லாத பல்வேறு கிராமங்களுக்கு சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் தீர்க்கப்பட வேண்டிய 10 முக்கிய கோரிக்கையில் இப்பகுதிக்கு தேவையான பல்வேறு கோரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
அதில் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். நமது கோரிக்கையின்படி தற்போது புதுவயலில் தீயணைப்பு நிலையம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தவிர மினி டைடல் பார்க். முதல்வரின் சிறு விளையாட்டரங்கம். 7 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்.
வாரச்சந்தை மேம்பாடு, பழைய பஸ் ஸ்டாண்ட் மேம்படுத்துதல், தரம் உயர்த்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலக புதிய கட்டிடம். சங்கரபதி கோட்டை புனரமைத்தல். வீறுகறியரசர் முடியரசனார் மணிமண்டபம். கண்டனூர் ரயில்வே கேட்டில் இருந்து புதுவயல் வழியாக அறந்தாங்கி சாலை வரை புதிய புறவழிச்சாலை, கண்டனூர் கதர் வளாகம் உள்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
The post முதல்வரின் திட்டங்களால் வளர்ச்சி பாதையில் காரைக்குடி தொகுதி: எம்எல்ஏ மாங்குடி பெருமிதம் appeared first on Dinakaran.