நன்றி குங்குமம் தோழி
குழந்தைகளின் பொழுதுபோக்கு பட்டியலில் முதலில் இடம் பிடிப்பது விளையாட்டுதான். சில குழந்தைகள் இசை, நடனம், பாடல், விளையாட்டுகள் என தங்களின் திறமையினை மேம்படுத்த பயிற்சிக்கு செல்வார்கள். மற்ற நேரங்களில் அவர்களின் பெரும்பாலான நேரங்களை மொபைலில் கழிக்கிறார்கள். அதனால் இன்றைய தலைமுறையினரிடம் குறிப்பாக குழந்தைகள் மத்தியில் புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இதனை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே கடந்த ஆண்டு ஸ்ரீ ராம் என்பவரால் சென்னை பெருங்களத்தூரில் ‘பிரக்ரித் அறிவகம்’ எனும் சிறார் நூலகம் செயல்பட்டு வருகிறது. இவர்கள் குறித்து பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியிலும் இடம் பெற்றுள்ளது. இவர்களின் நூலகம் புத்தக வாசிப்பு மட்டுமின்றி குழந்தைகளின் பல்வேறு கற்றல் திறன்களை மேம்படுத்தும் ஒரு கூடமாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்து ராம் பேசும்போது…
“என் மகன் குழந்தையாக இருக்கும்போதே அவனுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த ஒன்றிரண்டு புத்தகங்களை வாங்கிக் கொடுத்தோம். நாளடைவில் அவன் புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதை அறிந்ததும், அவனுக்கு நிறைய புத்தகங்களை வாங்கிக் கொடுக்க தொடங்கினோம். இது தெரிந்த உறவினர்களும் நண்பர்களும் கூட அவனுக்கு புத்தகங்களைத்தான் பரிசளிப்பார்கள். அவனுக்கு பரிசாகவும் நாங்க கொடுத்த புத்தகம் என வீட்டில் நிறைய புத்தகங்கள் குவிந்தன.
நாங்க கொரோனா காலக்கட்டத்தில் அமெரிக்காவில் இருந்தோம். அப்போது வீட்டை விட்டு வெளியே போக முடியாது. ஒரே பொழுதுபோக்கு, புத்தக வாசிப்பு என்றானது. அந்த சமயத்தில் பல வகையான புத்தகங்களை வாங்கியதால் அதுவும் சேர்ந்திருந்தது. 2022ல் இந்தியாவிற்கு திரும்பும் போது, அமெரிக்காவில் மட்டுமில்லாமல், இங்கும் நிறைய புத்தகங்களை படிக்க ஆரம்பித்ததால், அவை சேரத் துவங்கின. இதில் என் மகனுக்காக வாங்கிய சிறுவர்களுக்கான புத்தகங்களே அதிகம்’’ என்றவர், நூலகம் அமைத்தது குறித்து விவரித்தார்.
‘‘வீட்டில் அலமாரியில் படித்த புத்தகங்கள் எல்லாம் சும்மாதான் இருந்தன. அவற்றை மற்றவர்களும் பயன்படும்படி செய்ய நினைத்தேன். எங்க வீட்டின் முற்றத்தில் இந்தப் புத்தகங்களை கொண்டு சிறு நூலகம் ஒன்றை அமைத்தேன். முதலில் நாங்கள் வசிக்கும் அப்பார்ட்மென்டில் உள்ள குழந்தைகள் புத்தகங்களை எடுத்து படித்தனர். நாளடைவில் அவர்களின் நண்பர்கள் என நிறைய குழந்தைகள் புத்தகம் படிக்க வந்தனர்.
இவர்கள் புத்தகங்களை படிக்க வீடு பொருத்தமான இடமாக அமையவில்லை. அவர்கள் படிக்க தனி இடம் அமைக்க திட்டமிட்டேன். அதன் படி அமைக்கப்பட்டதுதான் பிரக்ரித் அறிவகம் நூலகம். நான் நூலகம் துவங்க இருப்பதாக சொன்னதும் என் நண்பர்கள் பலரும் புத்தகங்களை கொடுத்து உதவினார்கள். அவர்கள் கொடுத்தது மற்றும் என்னிடம் இருந்த புத்தகங்களைக் கொண்டுதான் இந்த நூலகத்தை நான் துவங்கினேன்’’ என்றவர், பிரக்ரித் நூலகம் அறிவுப்பூர்வமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட்டு வருவதைப்பற்றி விவரித்தார்.
‘‘இங்கு தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழி புத்தகங்கள் உள்ளன. நூலகத்திற்கு வரும் குழந்தைகள் அவர்கள் விருப்பம் போல புத்தகங்களை எடுத்து படிக்கலாம். நூலகம் வந்து புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற பழக்கம் குழந்தைகளுக்கு ஏற்பட்டாலே அவர்களுக்கு புத்தக வாசிப்பில் தானாகவே ஆர்வம் வரும். நூலகத்தினுள் மொபைல் ஃபோன், விளையாட்டுப் பொருட்கள் என எந்தவித கவனச்சிதறலும் இருக்காது. அவர்களை சுற்றி புத்தகங்கள் மட்டும்தான் இருக்கும்.
குழந்தைகளை பொறுத்தவரை அவர்களை கவரும் புத்தகத்தைதான் எடுத்து படிப்பார்கள். குழந்தைகளுக்குப் பிடித்த எந்த புத்தகத்தையும் எடுத்துப் படிக்கக் கூடிய சுதந்திரம் கொடுத்திருக்கிறோம். சில குழந்தைகள் அவர்களுக்கு ஆர்வமுள்ள விஷயங்கள் தொடர்பான புத்தகங்களை எடுப்பார்கள். உதாரணமாக ஒரு குழந்தைக்கு விண்வெளி, ராக்கெட், சாட்டிலைட் பிடிக்கும் என்றால் அது தொடர்பான படங்களுடன் கூடிய புத்தகத்தைத் தேடி படிப்பார்கள்.
மண், கடல், கல், பாறை, இயற்கை பிடிக்கும் எனில் அது சார்ந்த புத்தகம் அவர்களுக்கு பிடித்தமாக இருக்கும். இவ்வாறு அவர்களுக்கு பிடித்த புத்தகத்தை நாம் தேர்வு செய்து கொடுப்பதை விட அவர்களே எடுத்து படிக்கும் போதுதான் வாசிப்பின் மீது ஆர்வம் வரும். அதன் பிறகு நாம் அவர்களுக்கு புத்தகங்களை பரிந்துரை செய்யலாம். இதில் மிகவும் முக்கியமானது, அவர்களை கட்டாயப்படுத்தி புத்தகத்தை வாசிக்க சொல்லக்கூடாது. அவ்வாறு செய்தால், புத்தகம் வாசிப்பின் மீது வெறுப்பு ஏற்பட்டு விடும். அதன் பிறகு வாசிப்பதையே தவிர்த்துவிடுவார்கள். புத்தகம் வாசிக்க குறிப்பிட்ட சில மணி நேரத்தினை அவர்கள் ஒதுக்க பெற்றோர்கள் பழக்கப்படுத்த வேண்டும். அந்த நேரத்தில் சிரமம் பார்க்காமல் அவர்களை நூலகத்திற்கு அழைத்து வரவேண்டும்’’ என்றவர், புத்தக வாசிப்பு மட்டுமின்றி, கற்றல் திறன் செயல்பாடுகள் குறித்தும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
‘‘நூலகத்தில் ஒவ்வொரு வாரமும் தன்னார்வலர்கள் மூலம் ‘கதை சொல்லி’ நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருக்கிறோம். அதில் நூலகத்தில் உள்ள புத்தகங்களில் உள்ள கதைகளை சுவாரஸ்யமாக சொல்லும்போது அதனை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் குழந்தைகளுக்கு அதிகரிக்கும். அவர்கள் தானாகவே கதை புத்தகங்களை எடுத்து படிப்பார்கள். இதன் மூலம் கதை எழுதும் ஆர்வம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அவ்வாறு ஆர்வத்துடன் குழந்தைகள் எழுதிய ஆறு கதை புத்தகங்களை நாங்க வெளியிட்டு இருக்கிறோம். இந்த புத்தகங்களை படிக்கும் போது மற்ற குழந்தைகளுக்கும் புத்தக வாசிப்பிலும், எழுதுவதிலும் ஆர்வம் உண்டாகும். பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக அறிவியல் ஆய்வுகள் குறித்த பயிற்சியும் அளிக்கிறோம். அதன் மூலம் அவர்கள் ஆய்வுகளை காட்சிப்படுத்தி அதனை விளக்கும் வகையில் கண்காட்சிகளை நூலகத்தில் நடத்தி வருகிறோம். அரசுப் பள்ளி மாணவர்களும் நூலகத்தினை பயன்படுத்த ஊக்குவிக்கிறோம். நூலகத்திற்கு வர முடியாத அரசுப் பள்ளிகளுக்கு நாங்களே புத்தகங்களை எடுத்து செல்கிறோம். இதன் மூலம் குழந்தைகளுக்கு வாசிப்பு நேரத்தை ஒதுக்கி புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி வருகிறோம்.
பொதுவாக மாணவர்கள் பயன்படுத்திய நோட்டுப் புத்தகங்களில் பள்ளி ஆண்டு இறுதியில் பயன்படுத்தப்படாத வெற்றுத் தாள்கள் நிறைய இருக்கும். சிலர் அதை அப்படியே தூக்கி எறிந்துவிடுவார்கள். மாணவர்களின் பழைய நோட்டுப் புத்தகங்களை சேகரித்து அவற்றில் மீதமிருக்கும் பயன்படுத்தாத தாள்களை பிரித்தெடுத்து புது நோட்டுப்புத்தகங்களாக தயாரித்து மீண்டும் பள்ளிகளுக்கு வழங்கி வருகிறோம். குழந்தை வாசகர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு திட்டங்களையும் விரைவில் நிறைவேற்ற இருக்கிறோம். ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமையன்று திருக்குறள் கதைகளை குழந்தைகளுக்கு சொல்லித்தர திட்டமிட்டுள்ளோம்.
வாரம் ஒரு திருக்குறளை அடிப்படையாக வைத்து நடைமுறை கதைகளை குழந்தைகளுக்கு சொல்லி, அதன் மூலம் திருக்குறளை கற்பித்து, நன்னெறிகளை போதிப்பதற்காக தன்னார்வலர் ஒருவர் முன் வந்துள்ளார். நூலகத்திற்கு வரும் குழந்தைகளுக்கு ‘கதை எழுதுவது எப்படி?’ என்ற பயிற்சிப் பட்டறைகளை நடத்தவிருக்கிறோம். குழந்தைகளின் எழுதும் திறனை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் எழுதும் கட்டுரைகள், அவர்களின் நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துகள், எண்ணங்கள் போன்றவற்றை பிரக்ரித் அறிவகம் சார்பாக பத்திரிகையாக வெளியிடும் திட்டமும் விரைவில் நிறைவேற்றப்பட இருக்கிறது. மற்றொரு பயனுள்ள திட்டம் குழந்தைகளுக்கு நிதி கல்வியறிவினை வழங்கவுள்ளோம்.
நான் வெளிநாட்டில் வேலை பார்த்த போது சம்பாதிக்கும் பணத்தை எப்படி கையாளுவது என்று சரியாக தெரியாது. அதை புரிந்து கொள்ளவே எனக்கு அதிக காலம் தேவைப்பட்டது. குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே நிதி சார்ந்த கல்வியினை கற்றுக்கொடுத்தால் பணத்தை சேமிப்பது, சரியான வழிகளில் கையாளுவது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்வார்கள். அதற்கான சிறப்பு பாடத்திட்டத்தினை தயார் செய்கிறோம்’’ என்றவர், புத்தக வாசிப்பு பழக்கத்திற்கான சில குறிப்புகளையும் அதன் நன்மைகளையும் பகிர்ந்தார்.
“பெரும்பாலும் குழந்தைகள் அதிகபட்ச நேரம் மொபைல் ஃபோனையே பார்த்துக்கொண்டிருக்கும் நிலைதான் இப்போது உருவாகியிருக்கிறது. இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகும் முன்பே அவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளின் கண் முன்னே நாமும் நீண்ட நேரம் மொபைல் ஃபோனை பார்த்துக்கொண்டிருந்தால் அதையேதான் அவர்களும் செய்வார்கள். நாம் புத்தகங்களை வாசிப்பதை பார்க்கும்போது குழந்தைகளும் புத்தகங்களை எடுத்து படிக்கத் தொடங்குவார்கள்.
அவர்கள் பள்ளிப் பாடப்புத்தகங்களை படிப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது, இதில் மேலும் கல்விசாரா புத்தகங்களை படிப்பது அதிக சுமை என்பதைப்போல் கருதுகின்றனர். கதை புத்தகங்கள், பொது அறிவு பற்றிய புத்தகங்களை படிப்பது அவர்களின் கற்றல் திறன், நினைவாற்றல், மூளை செயல்பாடுகளை மேம்படுத்தி அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும் உதவும் என்பதால், குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பு பழக்கம் மிகவும் அவசியமானது.
அதற்கு முதல் படியாக குழந்தைகளை நூலகத்திற்கு பழக்குங்கள். மேலும் எங்களின் நூலகத்திற்கு புத்தகங்களை தானமாக கொடுக்க விரும்புபவர்கள், பல்வேறு பயனுள்ள திட்டங்களை மேம்படுத்த நிதி உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் prakritharivagam என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் எங்களை தொடர்புகொள்ளலாம்” என்றார் ஸ்ரீ ராம்.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்
The post குழந்தைகளின் கற்றல் திறன்களை மேம்படுத்தும் கூடமாக மாறிய நூலகம்! appeared first on Dinakaran.