குல தெய்வ வழிபாட்டிற்கு உகந்த பங்குனி உத்திர திருநாள்

1 month ago 10

உலகில் எத்தனையோ வழிபாட்டு முறைகள் இருந்தாலும், அவரவர் சமூக கட்டமைப்பில் உள்ள வழிபாட்டு முறைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். அவ்வகையில் இந்துக்களுக்கு குலதெய்வ வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

குல தெய்வத்தின் அருள் இருந்தால்தான் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெறும், குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் பெருகும் என்பது நம்பிக்கை. குலத்தை காத்து, பாதுகாப்புடன் வாழவைக்கும் குலதெய்வத்தை நினைக்காமல், பூஜிக்காமல் தொடங்கும் எந்த ஒரு செயலும் முழுமை பெறாது. குல தெய்வ வழிபாட்டை மறந்து விட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருப்பது, கடன், நோய், குடும்பத்துக்குள் பிரச்சினை என்று குழப்பமும், மன அமைதியின்மையும் ஏற்படலாம்.

இத்தகைய பிரச்சினைகளில் இருந்து விடுபட வேண்டுமானால், தொடர்ந்து குல தெய்வ வழிபாட்டை செய்வது அவசியம். குலதெய்வத்துக்கு உரிய படையல் போட்டு திருப்தி ஏற்படுத்த வேண்டும். குல தெய்வம் மகிழ்ச்சி அடைந்தால், அவர்களின் குலமே செழிக்கும். தினம், தினம் குல தெய்வத்தை வணங்குபவர்களுக்கு எந்த குறையும் வராது. குதூகலம்தான் வரும்.

பூர்வீக ஊரில் இருப்பவர்களுக்கு குல தெய்வத்தை வழிபட எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் ஊரை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறி விட்டவர்களுக்கு, குல தெய்வ வழிபாடு செய்வது என்பது அரிதான ஒன்றாகும். அப்படிப்பட்டவர்களுக்காகவே ஆண்டுக்கு ஒரு தடவை பங்குனி உத்திரம் தினத்தன்று ''குல தெய்வ வழிபாடு'' செய்யும் பழக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, குல தெய்வ வழிபாட்டுக்குரிய பங்குனி உத்திர நன்னாள் 11.4.2025 ஆகும். அன்றைய தினம் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகுந்த பலனை தரும். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோவில்களில் நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் குடும்பத்தினருடன் பங்கேற்றால் மன அமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். குல தெய்வ கோவில் பூஜைகளுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம்.

எத்தனை கடவுள்களை வணங்கினாலும் சரி, குல தெய்வத்தை வழிபடாவிட்டால் குண்டுமணி அளவுக்கு கூட பிரயோஜனம் இல்லை என்று பெரியவர்கள் சொல்வார்கள். யார் ஒருவர் குல தெய்வத்தை விடாமல், ஐதீகத்துடன் வழிபாடு செய்து வருகிறாரோ, அவரை எந்த கிரகமும் நெருங்கி தொல்லை கொடுக்காது என்பது அசைக்க முடியாத நம்பிக்கை,.

குலதெய்வம் என்பது தாய்-தந்தையைப் போல கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. குடும்பத்தில் ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்துதான் வரும் என கிராமங்களில் சொல்வார்கள். குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோவிலில்தான் செய்வது வழக்கமாக உள்ளது. அதேபோல் குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம்.

சுப நிகழ்ச்சிகளை தொடங்குபவர்கள் உடனே குல தெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோவிலுக்கு செல்லும்போது செலுத்தி விடுவது வழக்கம். 

Read Entire Article