
குற்றாலம்,
குற்றாலத்தில் சீசன் சமயத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான குற்றாலம் சாரல் திருவிழா வருகிற 19-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் என கலெக்டர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
குற்றால சாரல் திருவிழாவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர். தொடக்க விழா நிகழ்வில் தென்காசி எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் என பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
சாரல் திருவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி 19-ம் தேதி முதல் நாள் நிகழ்வாக பரதநாட்டியம், ஜிக்காட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம் மற்றும் திரைப்படம் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறுகின்றன.
20-ம் தேதி கொலு கொலு குழந்தைகள் போட்டி கிராமிய கலை நிகழ்ச்சி, கை சிலம்பாட்டம் நிகழ்ச்சி, கேரளா மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி, 21-ம் தேதி யோகாசன போட்டிகள் நாட்டிய நாடகம் வில்லிசை நிகழ்ச்சி தோல் பாவை கூத்து நிகழ்ச்சி மற்றும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
22-ம் தேதி படகு போட்டி, பல்சுவை நிகழ்ச்சி, கிராமிய கலை நிகழ்ச்சி, கொடைக்கானல் பூம்பாறை பழங்குடியின மக்களின் தோடர் நடனம் நிகழ்ச்சி, கர்நாடக மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சிகளும், 23-ம் தேதி பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி ஓவியம் கவிதை மற்றும் பாட்டு போட்டி திருநங்கைகள் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சிகள் கனியான் கூத்து நிகழ்ச்சி, பரதநாட்டிய நிகழ்ச்சி கர்நாடக மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மெல்லிசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
24-ம் தேதி பெண்களுக்கான கோலப்போட்டி, வில்லிசை நிகழ்ச்சி, மலர் கம்பம் நிகழ்ச்சி பரதநாட்டியம், ஆந்திரா தெலுங்கானா மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டுப்புற பல்சுவை நிகழ்ச்சிகள், 25-ம் தேதி அடுப்பில்லாமல் சமைத்தல் மற்றும் சிறுதானிய உணவுப் போட்டி நையாண்டி மேளம் மற்றும் கரகாட்டம் கிளாரினெட் நிகழ்ச்சி தப்பாட்டம் நிகழ்ச்சி ஆந்திரா தெலுங்கானா மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் திரையிசை தெம்மாங்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
26-ம் தேதி பளு தூக்குதல் வலு தூக்குதல் மற்றும் ஆணழகன் போட்டி கிராமிய கலை நிகழ்ச்சி நகைச்சுவை நிகழ்ச்சி ஜிம்ளா மேளம் ( எருதுகட்டு மேளம்) நிகழ்ச்சி மெல்லிசை நிகழ்ச்சிகளும் 27-ம் தேதி நாய்கள் கண்காட்சி நாட்டிய நாடகம் நிகழ்ச்சி கிராமிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மாடாட்டம் மற்றும் மயிலாட்டம் நிகழ்ச்சி மராட்டிய மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சி இன்னிசை கலை நிகழ்ச்சிகளும் இறுதி நாளாக நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குற்றால சாரல் திருவிழா இந்த ஆண்டு 9 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளதால் அதனை கண்டு களிக்க வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.