*வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
ஏர்வாடி : பல ஆண்டுகளாக அகலப்படுத்தப்படாமல் குறுகலாக இருப்பதால் ஏர்வாடி-மாவடி சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் எதிர்வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். எனவே, இந்த சாலையை விரிவு படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் இருந்து மாவடி செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக தான் களக்காடு, பாபநாசம், தென்காசி போன்ற ஊர்களுக்கு செல்வதற்கு மிகவும் முக்கியமான சாலையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை குறுகலாக இருப்பதால் எதிரில் வரும் வாகனத்திற்கு வழி விடுவதற்காக வாகனங்கள் சாலையை விட்டு இறங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று நீண்டகாலமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் இந்த சாலை அகலப்படுத்தப்படாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் விபத்தால் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்து உள்ளது. குறிப்பாக, கடந்தாண்டில் கட்டளையை சேர்ந்த இரண்டு பேர், டோனாவூரை சேர்ந்த ஒருவர் இந்த சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு தனியார் பள்ளி வாகனம் எதிர்வரும் வாகனத்திற்கு வழி விடும்போது பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவ, மாணவிகள் உயிர் தப்பினர்.
இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் விபத்து ஏற்படுவதும், உயிர்ப்பலி நடப்பதும் தொடர்ந்து கொண்டே வருகிறது. எனவே இந்த சாலையை உடனடியாக விரிவு படுத்த வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் நெல்லை மாவட்ட பொதுச்செயலாளர் கக்கன் கூறுகையில், ‘கடந்த 2007ம் ஆண்டு வசந்தகுமார் எம்எல்ஏவாக இருந்த போது இந்த சாலை விரிவுபடுத்த சர்வே செய்யப்பட்டது. அதன்பின்னர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் நெடுஞ்சாலைத்துறையினர் எடுக்கவில்லை. குறிப்பிட்ட ஒரு கிலோ மீட்டர் மட்டுமே அகலப்படுத்தப்பட்டது. இந்த சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
எதிர்வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி நேரிடுகிறது. ஆகையால் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி இச்சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று நெல்லை எம்பி ராபர்ட் புரூஸிடமும், நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரனிடமும் கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். வாகன ஓட்டிகளின் நலன் கருதி ஏர்வாடியில் இருந்து மாவடி வரை உள்ள 4 கிலோமீட்டர் மாநில நெடுஞ்சாலை அகலப்படுத்த வேண்டும்’ என்றார்.
The post குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏர்வாடி-மாவடி சாலை விரிவுபடுத்தப்படுமா? appeared first on Dinakaran.