?குரு பார்வைக்கும் குரு ஸ்தானத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன ஐயா?

2 hours ago 3

– லட்சுமிப்ரியா, திருச்சி.
உங்களுடைய கேள்வி ஜோதிடரீதியாக அமைந்திருக்கிறது என்று கருதுகிறேன். ஜனன ஜாதகத்தில் லக்னம் அல்லது ராசியினை குரு பார்த்தால் குருபலம் அல்லது குருபார்வை என்று சொல்வார்கள். குருவிற்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உண்டு. அதாவது குரு அமர்ந்திருக்கும் ராசியில் இருந்து எண்ணி வர 5,7,9 ஆகிய இடங்களில் சந்திரனோ அல்லது லக்னமோ அமைந்திருந்தால் குருபார்வை உண்டாகி இருக்கிறது என்று பொருள். இதனால் குருபலம் என்பது கிடைத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கிறது. குருஸ்தானம் என்றால் ஜோதிட ரீதியாக குரு அமர்ந்திருக்கும் இடம் என்று பொருள். லக்னம் அல்லது சந்திரனுக்கு 1,2,4,5,7,9,10,11 ஆகிய இடங்களில் குரு அமர்ந்திருந்தால் குரு அமர்ந்த ஸ்தான பலம் என்பது வெற்றியைத் தருகிறது. தத்துவார்த்தமாகப் பார்த்தால் தொடர்ச்சியான குரு பார்வை என்பது ஒரு சாமானியனையும் குரு ஸ்தானத்திற்கு உயர்த்துகிறது என்று பொருள் கொள்ளலாம்.

?பிரசன்ன ஜோதிடம் என்பது என்ன?

– மோகன், விழுப்புரம்.
ப்ரஸ்னம் என்பது வேறு பிரசன்னம் என்பது வேறு. ப்ரஸ்னம் என்றால் கேள்வி என்று பொருள். பிரசன்னம் என்றால் நிகழ்காலம் அல்லது வெளிப்படுவது என்று பொருள். ப்ரஸ்னம் என்பதுஆன்மிகம் சார்ந்தது. பிரசன்னம் என்பது அறிவியல் ரீதியான ஜோதிடம். ப்ரஸ்னம் பார்ப்பது கேரள முறைப்படி சோழி உருட்டி பார்க்கப்படுவது. அதனை பார்ப்பதற்கு மடி, ஆசாரம்,அனுஷ்டானம் அத்தனையும் அவசியம். தாந்த்ரீக முறைப்படி பூஜைகளை செய்து அதன் பின்னரே கணிக்க முடியும். ஜாதகத்தின் மூலம் நம்மால் அறிய முடியாத பல விஷயங்களையும், அறிவியலுக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யமான விஷயங்களையும் இந்த ப்ரஸ்ன ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள இயலும். இந்த முறையில் தனி மனிதனுக்கு இருக்கக் கூடிய அமானுஷ்யமான பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும். ப்ரஸ்னத்தை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் பார்த்துவிட முடியாது. ஒரு சிலருக்கு மூன்று மணி நேரத்தில் பார்த்துவிட முடியும். ஒரு சிலருக்கு மூன்று நாட்கள் வரை கூட நீடிக்கும். ஆனால், பிரசன்ன ஜோதிடம் என்பது அறிவியல் முறைப்படி பார்ப்பது. இது பெரும்பாலும் ஜனன ஜாதகம் இல்லாதவர்களுக்கு அதாவது பிறந்த நேரம் தெரியாதவர்களுக்கு பயன்படுகிறது. இவர்களுடைய மனதில் எழுகின்ற ஏதேனும் ஒரு கேள்விக்கு மட்டும் ஒரு நேரத்தில் விடை காண முடியும். உதாரணத்திற்கு இவருக்கு திருமணம் நடைபெறுமா, எப்போது நடைபெறும் என்ற கேள்விக்கான விடையை அறிந்து கொள்ள முடியும். இதற்கு 1 முதல் 249ற்குள் ஏதேனும் ஒரு எண்ணைச் சொல்லுங்கள் என்று ஜோதிடர் கூறுவார். அந்த எண்ணிற்கு உரிய உபநட்சத்திர அதிபதியைக் கணக்கிட்டு அதனைக் கொண்டு பலன் உரைப்பார்கள். இந்த முறையில் ஒரு நேரத்தில் ஒரு கேள்விக்கான பதிலை மட்டுமே பெற முடியும். மாறாக எப்போது திருமணம் நடக்கும், எப்போது உத்யோக உயர்வு கிடைக்கும், எப்போது வீடு கட்ட முடியும் என்று ஒரே நேரத்தில் பல வினாக்களுக்கு விடை அளிக்க முடியாது.

?மறுஜென்மம் என்பது மனிதனின் கற்பனையா?

– சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.
நிச்சயமாக இல்லை. அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்றஅவ்வையின் கூற்றின்படி எத்தனையோ பிறவிகளைக் கடந்து இந்த மனிதப்பிறவியை எடுத்திருக்கிறோம் என்பது புலனாகிறது. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று சிலப்பதிகாரம் நமக்கு அடித்துச் சொல்கிறது. அதாவது முன்ஜென்மப் பலனைத் தான் இந்த ஜென்மாவில் அனுபவிக்கிறோம் என்பதும் இதன் மூலம் புலனாகிறது. புனரபி ஜனனம் புனரபி மரணம் என்கிறார், ஆதிசங்கரர். வேதம் சொல்கின்ற கருத்துக்களைத் தான் நம்முடைய முன்னோர்கள் நமக்கு எளிதாகப் புரிகின்ற வகையில் எடுத்து உரைத்திருக்கிறார்கள். ஜோதிட சாஸ்திரம் கூட பதவீ பூர்வபுண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா என்று உரைக்கிறது. அதாவது முன்ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்தின் பலனை இந்த ஜென்மாவில் அனுபவிக்கும் விதமாக இந்த ஜாதகம் அமைந்துள்ளது என்பது இதன் பொருள். இப்படி எல்லா இடங்களில் முன்ஜென்மம் பற்றி பேசப்படுவதால் மறுஜென்மம் என்கின்ற வார்த்தையும் உண்மையாகிறதுதானே. மறுஜென்மம் என்பது நிச்சயமாக மனிதனின் கற்பனை அல்ல. அது முற்றிலும் உண்மையே.

?சில ஜோதிடர்கள் மணமுடிக்க தேய்பிறையில் நாள் குறிப்பது ஏன்?

– சு.ஆறுமுகம், கழுகுமலை.
தேய்பிறையாக இருந்தாலும் அந்நாட்களில் நேத்ரம், ஜீவன் என்பது இடம்பெற்றிருக்கும். நேத்ரம், ஜீவன் ஆகிய இரண்டும் முழுமையாக இருந்தால் அந்த நாள் ஆனது தேய்பிறை நாளாக இருந்தாலும் வளர்பிறை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பார்வை எனப்படும் நேத்ரம், உயிர் எனப்படும் ஜீவன் ஆகிய இரண்டும் முழுமையாக இருக்கும் பட்சத்தில் தேய்பிறை நாட்களிலும் முகூர்த்தம் வைக்கலாம் என்கிற விதிமுறையைப் பின்பற்றியே ஜோதிடர்கள் நாட்களைக் குறித்துத் தருகிறார்கள்.

?மூலவர் இருக்கும் கருவறைக்கு மேல் விமானம் ஏன் அமைக்கப்படுகிறது?

– ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.
மானம் என்றால் அளவு என்று பொருள். `வி’ என்றால் கடந்த என்று பொருள். அதாவது அளவு கடந்த தெய்வீகத்தன்மை உடையதுதான் விமானம் என்பது. ஒரு ஆலயம் என்பது மனித உடலோடு ஒப்பிடப்படுகிறது. அதில் கருவறை என்பது தலைப்பகுதியாகவும், அதன்மேல் உள்ள விமானம் என்பது கிரீடமாகவும் பார்க்கப்படுகிறது. விமானத்தை கட்டமைப்பதிலும் ஆகம விதிமுறைகள் என்பது உண்டு. விமானத்தின் உச்சியில் அமைந்துள்ள கலசம் தெய்வீக சக்தியை ஈர்க்கும் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும். கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மூலவர் விக்கிரகம் விமான கலசத்தின் மூலமாக தெய்வீக சக்தியினை ஈர்த்துக்கொண்டு சாந்நித்யம் பெறுகிறது. ஒரு அரசனுக்கு தலையில் கிரீடம் என்பது எத்தனை முக்கியமோ அதுபோல கருவறையில் உள்ள மூலவருக்கு விமானம் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாலேயே கருவறையின் மேல் விமானம் என்பதும் கட்டமைக்கப்படுகிறது.

?ஈமக்கிரியை நடைபெறுவது போல் கனவு காண்பது நல்லதா?

– பி.கனகராஜ், மதுரை.
ஈமக்கிரியை என்று நீங்கள் எதனைக் குறிப்பிடுகிறீர்கள் என்பது தெரியவில்லை. ஏதோ ஒரு பிணம் எரிந்துகொண்டிருப்பது போல கனவு வந்தால் நல்லது. எரிந்து கொண்டிருக்கும் பிணம் நமக்கு பரிச்சயமான நபர் என்றால் அது நல்லதல்ல. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். அதேபோல பிண்டம் வைத்து கரும காரியம் செய்வது போல கனவு வந்தால் நல்லதல்ல. நதிக்கரை அல்லது தீர்த்தக்கரையில் ஸ்நானம் செய்து தர்ப்பணம் விடுவதுபோல கனவு கண்டால் முன்னோர்களுக்கான கடன் ஒன்று பாக்கி இருப்பதைப் புரிந்து கொண்டு அதனை உடனடியாக செய்து முடித்துவிட வேண்டும். அசுப சடங்குகள் கனவில் வந்தால் உடனடியாக அன்றைய தினமே அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று வழிபட்டு நெற்றியில் திருநீறு பூசிக்கொள்வது நல்லது.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் வர்மா

The post ?குரு பார்வைக்கும் குரு ஸ்தானத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன ஐயா? appeared first on Dinakaran.

Read Entire Article