கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் கும்மிடிப்பூண்டி சிப்காட், பெத்திகுப்பம், சுண்ணாம்புக்குளம், தேர்வழி, மங்காவரம், சித்தராஜ் கண்டிகை, பெரிய ஒபுளாபுரம், எளாவூர் பஜார், புதுவாயில், மேல்முதலம்பேடு, பன்பாக்கம், கவரப்பேட்டை, ஆரம்பாக்கம், மாதர்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. தற்பொழுது கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் எண்ணற்ற தொழில் நிறுவனங்கள் வந்ததால் ஆங்காங்கே அடுக்குமாடி குடியிருப்புகளும் தொழில் நிறுவனங்களும் அதிகமாகியது.
இதனால் வீட்டில் கழிவுநீர் தொட்டி தேங்கியதும் அதனை பொதுமக்கள் தனியார் லாரிகள் மூலம் அகற்றப்படுவது வழக்கமாகிவிட்டது. அப்படி அகற்றப்படும் கழிவுநீரானது சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைகளிலும், வயல்வெளிகளில் இரவோடு இரவாக கொண்டுவந்து கொட்டப்படுவதால் கால்வாய் மற்றும் குளங்கள் மாசடைந்து பெரும் தொற்றுநோய் பருவம் அபாயம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஊடகம் வாயிலாக செய்திகள் போடப்பட்டு, அதன் எதிரொலியாக வாகனங்கள் பறிமுதல் செய்தும், அபராதம் விதிக்கப்பட்டும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதன் காரணமாக கழிவுநீர் அகற்றும் லாரி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் வாழ்வாதாரமிழந்து தங்களின் கழிவுநீர் வாகனங்களை விற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேசமயம் பெருநகரங்களில் தமிழக அரசு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துள்ளது. அதேபோல் கும்மிடிப்பூண்டி பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, கும்மிடிப்பூண்டி வட்டார கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர் சங்கம் சார்பாக, சுமார் ஐந்து வருடங்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, அந்த இடத்தில் அந்த சுத்திகரிக்கப்பட்ட நீரை பூங்காக்களுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இதற்காக கழிவு நீர் வாகன உரிமையாளர் சங்க சட்ட ஆலோசகர் சம்பத் தலைமையில், வட்டாட்சியர், கோட்டாட்சியர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை மனு அளித்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் இதனால் வரை கும்மிடிப்பூண்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதற்கிடையில் ஒரு சில வாகனங்கள் வீடுகளில் எடுக்கும் கழிவு நீரை திறந்தவெளியில் மீண்டும் விடுகிறார்கள் என பெரும் குற்றச்சாட்டு எழுந்து, அதிகாரிகள் வாகனத்தை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட வாகனங்களை சென்னை கொல்கத்தா தேசிய சர்வீஸ் சாலையில் நிறுத்தி வைத்துவிட்டு, உடனடியாக கும்மிடிப்பூண்டி பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென கோஷங்கள் எழுப்பியவாறு தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர். அத்தோடு மீண்டும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சரவணக்குமாரிக்கு கோரிக்கை மனு அளித்தனர்.
The post கும்மிடிப்பூண்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க வேண்டும்: லாரி உரிமையாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.