
லக்னோ,
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா திகழ்கிறது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கிய கும்பமேளா வரும் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது.
இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் புருலியா பகுதியை சேர்ந்த பக்தர்கள் 30க்கும் மேற்பட்டோர் பஸ்சில் மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு சென்றனர். உத்தரபிரதேசத்தின் நாக்நாத்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் பஸ் நின்றுள்ளது.
அப்போது, பஸ்சில் இருந்த இறங்கிய ஜகோரி (வயது 45), மஹொடா (வயது 70), அல்பனா (வயது 47) ஆகியோர் இயற்கை உபாதை கழிக்க நெடுஞ்சாலையின் மறுபுறம் செல்ல முயன்றனர். அப்போது, நெடுஞ்சாலையில் வேகமாக வந்த வாகனம், 3 பெண்கள் மீதும் மோதியது. இந்த சம்பவத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
உடனடியாக அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 3 பெண்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண் பக்தர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.