
மாஸ்கோ,
இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து சர்வதேச நாடுகளிடம் விளக்கமளிக்க தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையிலான குழு ஸ்பெயின், கிரீஸ், லாட்வியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளது.
கனிமொழி குழுவில் ராஜீவ் ராய், மியான் அட்லப் அகமது, கேப்டன் பிரிஜேஷ் சவுதா, பிரம் சந்த் குப்தா, அசோக் குமார் மிட்டல் ஆகிய எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் ரஷ்யாவின் சர்வதேச விவகார கவுன்சில் துணைத் தலைவர் ஆண்ட்ரெய் டெனிஸோ மற்றும் மூத்த எம்.பி.க்களை மாஸ்கோவில் நேற்று சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பில், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து ரஷ்ய அரசிடம் கனிமொழி எம்.பி. தலைமையிலான எம்.பி.க்கள் குழு விளக்கம் அளித்தது. மேலும், பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்து வருவதை குறித்தும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
முன்னதாக கனிமொழி தலைமையிலான குழு நேற்று முன்தினம் இரவு ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு சென்றபோது, உக்ரைன் ராணுவம் மாஸ்கோ விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளின் மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் கனிமொழி குழு சென்ற விமானம் உள்பட ஏராளமான விமானங்கள் தரையிறங்க முடியாமல் 45 நிமிடங்கள் வானில் வட்டமடித்தன.
இதைத் தொடர்ந்து உக்ரைன் டிரோன்களை ரஷிய ராணுவம் நடுவானில் சுட்டு வீழ்த்தியது. பாதுகாப்பு அச்சுறுத்தல் நீங்கிய பிறகு மாஸ்கோ விமான நிலையத்தில் பயணிகள் விமானங்கள் தரையிறங்கின. கனிமொழி குழுவினர் சென்ற விமானமும் பத்திரமாக தரையிறங்கியது. அவர்களை ரஷியாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் வரவேற்று அழைத்துச் சென்றார்.