
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்துவந்தார். இவரது அழகிய தோற்றம் காண்போரை வசீகரித்தது. யூடியூபர் ஒருவர் இவரை வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்யவே சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக மாறினார் அந்த பெண். அவரது தோற்றத்தை வைத்து அவருக்கு 'மோனலிசா போஸ்லே' என்று நெட்டிசன்கள் பெயர் சூட்டியுள்ளனர். செல்பி தொந்தரவு தாங்கமுடியாமல் கும்பமேளாவிலிருந்து தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டார் மோனலிசா. அதன்பிறகு சமூக வலைதளங்களில் பிரபலமாக மாறிவிட்டார். யூடியூப் சேனல், இன்ஸ்டாகிராம் பக்கம் என இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது. தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதோடு பாலிவுட்டிலும் நுழைவீர்களா என்று கேட்டதற்கு, வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்று குறிப்பிட்டு இருந்தார். சனோஜ் மிஸ்ரா இதற்கு முன்பு ராம் கி ஜன்மபூமி உட்பட ஏராளமான படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது 'டைரி ஆப் மணிப்பூர்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிக்க மோனலிசாவிற்கு வாய்ப்பு கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தால் அவரது ஜாமீன் நிராகரிக்கப்பட்டதை அடுத்து இந்த கைது நடந்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள சிறிய ஊர் ஒன்றில் வசிக்கும் 28 வயது பெண்ணை காதாநாயகி ஆக்குகிறேன் என ஆசைகாட்டி இயக்குநர் மனோஜ் மிஸ்ராபாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.பாதிக்கப்பட்ட பெண்ணை 2020ம் ஆண்டு டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் சனோஜ் மிஸ்ரா சந்தித்தார். படத்தில் வாய்ப்புகள் தருவதாக அவருக்கு ஆசை காட்டியுள்ளார். 2021 ஜூன் மாதம் அப்பெண்ணை ஜான்சி ரெயில் நிலையத்துக்கு இயக்குநர் அழைத்துள்ளார்.அப்பெண் வர மறுக்கவே தான் தற்கொலை செய்துகொள்வேன் என பெண்ணிடம் இயக்குநர் கூறியிருக்கிறார். இதனால் அப்பெண் ரெயில் நிலையம் சென்றார். அங்கிருந்து அப்பெண்ணை ரிஸார்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.அதை படம் பிடித்து வைத்து அப்பெண்ணை மிரட்டி, அதன் பின்னும் தான் சொல்லும் இடங்களுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார். மேலும் அவரை திருணம் செய்துகொள்வதாக ஏமாற்றி மும்பைக்கு அழைத்துச் சென்று லிவ் இன் உறவில் வாழ நிர்ப்பந்தித்துள்ளார். இந்த காலகட்டத்தில் மூன்று முறை அப்பெண்ணை கட்டாய கருக்கலைப்புக்கும் உட்படுத்தி உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அப்பெண்ணை கைவிட்டுள்ளார். மேலும் போலீசில் புகார் கொடுத்தால் அந்தரங்க படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சனோஜ் மிஸ்ரா அளித்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.