கும்பகோணத்தில் நாளை மறுநாள் சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு: ராமதாஸ் அறிவிப்பு

19 hours ago 1

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

வன்னியர் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தையடுத்த தாரசுரம் புறவழிச்சாலையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.00 மணிக்கு நடைபெறவிருக்கிறது. மாநாட்டிற்கான நிறைவுகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதில் பங்கேற்க உங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.

வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி மாநாட்டுக்கு தலைமையேற்கிறார். வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான நானும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசும் மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறோம். பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள், பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கவுள்ளனர். மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ம.க.ஸ்டாலின், வன்னியர் சங்க செயலாளர்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், க.வைத்தி உள்ளிட்டோர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சமூகநீதி, சமய, சமுதாய நல்லிணக்கம் ஆகியவை குறித்து பேசும் தகுதியும், உரிமையும் நம்மைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. சமூக நீதிக்காகவும், சமூக ஒற்றுமைக்காகவும், நல்லிணக்கத்திற்காகவும் கடந்த 45 ஆண்டு காலங்களில் ஏராளமான பணிகளை செய்திருக்கிறோம். அதன் தொடர்ச்சியாகவே இப்போது சோழ மண்டக சமய, சமுதாய நல்லிணக்க மாநாட்டை கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் நடத்துகிறோம். தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் இது திருப்புமுனையை ஏற்படுத்தும்.

மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்குத் தேவையான இருக்கைகள், குடிநீர், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் சமய, சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தக் கூடிய பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாநாட்டுக்கு பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் அவர்களின் குடும்பத்துடன் படைதிரண்டு வர வேண்டும் என்பது தான் எனது விருப்பமும், வேண்டுகோளும் ஆகும். உங்கள் அனைவரையும் காண நான் ஆவலுடன் கும்பகோணத்தில் காத்திருப்பேன். பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் அனைவரும் படை திரண்டு வர வேண்டும்.

மாநாட்டுக்கு வர வேண்டும் என்பதை விட மிகவும் பாதுகாப்பாக வந்து, பாதுகாப்பாக திரும்பிச் செல்ல வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம். வாகனங்களை அதிவேகமாக இயக்காமல், மிதவேகத்தில் பயணிக்க வேண்டும். உங்களுக்காக நான் கும்பகோணத்தில் காத்திருப்பேன். மாநாடு முடிந்து நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இல்லம் திரும்பும்வரை நான் பதட்டத்துடன் தான் காத்திருப்பேன். உங்களின் வருகையால் மாநாடு சிறக்கும்; மாநாட்டின் நோக்கங்கள் வெல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article