கும்ப ராசிக்காரர்கள் தொழிலில் உச்சம் அடைவர்

5 hours ago 2

கும்ப ராசியின் அதிபதி சனி. இந்த ராசியில் அவிட்டம் மூன்றாம், நான்காம் பாதமும், சதயம் நான்கு பாதங்களும், பூரட்டாதியில் முதல் மூன்று பாதங்களும் அமைகின்றன. அவிட்ட நட்சத்திரத்துக்காரரின் அடையாளம் செவ்வாய் குணமுடையதாக இருக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரரின் அடையாளம் அல்லது தொழில் குரு தொடர்புடையதாக இருக்கவும் வாய்ப்புண்டு. சதயத்தில் பிறந்தவர்கள், ராகு தொடர்பான தொழில் அடையாளத்தை பெற்றிருப்பர். கும்பராசியின் தொழில் ஸ்தானம், விருச்சிகமாக இருப்பதனால் கும்பராசியினர் தொழில் விஷயத்தில் விருச்சிகத்திற்குரிய அமைதியும், உள் மன பயமும், திடீரென அசாத்திய துணிச்சலும் கொண்டவராக இருப்பார்கள்.

கடும் உழைப்பாளிகள்

கும்பராசியினர், இரவு பகல் பார்க்காமல் வேலை பார்க்கும் கடுமையான உழைப்பாளிகள். சுயநலம் கருதாதவர்கள். வேலை, தொழில் என்று எந்தத் துறையில் இருந்தாலும் முதலாளி போல இல்லாமல், தொழிலாளி போலவே
கடுமையாக வேலை பார்ப்பார்கள்.

பல தொழில் ராசி

கும்பராசிக்காரர்கள் பல தொழில்களுக்கு ஏற்றவராக இருப்பார்கள். விஞ்ஞானி, பொறியாளர், சமூக சேவகர், தொழிலதிபர், கணினியாளர், தொழில்நுட்ப வினைஞர் என்று எல்லாத் தொழிலும் இவர்களுக்கு ஏற்ற தொழிலாகவே அமையும். கும்பராசிக்காரர்கள் பேச்சில் வல்லவராக, வாக்கு தொடர்பான வக்கீல், வாத்தியார் தொழிலிலும் பிரகாசிக்க வாய்ப்புண்டு. சினிமா, டிவி போட்டோகிராபராககூட இருக்கலாம்.

ஏற்ற தொழில்கள்

கும்பராசியினர் எந்திரப் பொறியியல் (மெக்கானிக்கல் இன்ஜினியர்), சோதனைக்கூடங்களில் இருந்து செய்யப்படும் அறிவியல் பரிசோதனைகள் தொடர்பான ஆய்வுகள், அடித்தள மக்களிடம் தரவு சேகரித்தல், அவர்களோடு ரகசியமாக இணைந்து வாழ்ந்து சில பல உண்மைகளைக் கண்டறிதல் போன்ற துறைகள் இவர்களுக்கு ஏற்ற விருப்பமான பணிகளாக அமையும். மலை, காடு, கடல் போன்றவற்றில் பயணம் செய்வதை இவர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. இவை தொடர்பான வேலைகளும் இவர்களுக்கு அமைவது அரிதினும் அரிது.

அரசியல் பணி

கும்ப ராசிக்காரர்களுக்கு ஏற்ற மற்றொரு பணி மக்கள் பணியாகும். அடித்தள அரசியல், கும்ப ராசியினருக்கு மிகவும் ஏற்றது. சமூக நலப் பணிகள், சமூக சேவகர், சம்பளம் இல்லாத ஊழியப்பணி போன்றவை சிறப்பாக அமையும். அரசியலில் அடிமட்டத் தொண்டராக இருந்து படிப்படியாக முன்னேறி நல்ல பதவிகளைப் பெறுவதற்கு வாய்ப்பு உண்டு. கும்பராசியினர் மிகுந்த பொறுமைசாலிகள். இவர்கள் நிதானமாகப் போராடி முன்னேறி போட்டியாளர்களை அகற்றிவிட்டு வெற்றிக்கனியை பறித்துவிடுவர். அடித்தள மக்களிடம் களப்பணி செய்ய இவர்கள் தயங்குவதில்லை. மண், காற்று, தூசி, அழுக்கு இவைகளைப் பொருட்படுத்தாமல் அவர்களோடு இணைந்து இருந்து பணி செய்வதில் ஈடுபாடும் உடையவர்கள்.

போட்டியாளர் துவம்சம்

கும்பராசியினருடைய கடும் உழைப்புக்குக் காரணம், இவர்கள் உடலில் அதீத சக்தியும் மனதில் மிதமிஞ்சிய துணிவும் இருக்கும். எனவே எந்தச் சூழ்நிலையிலும் கத்தி கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்யாமல் நின்று நிதானமாக சிந்தித்து பகைவரை வெல்வார்கள். போட்டியாளரைக் களத்தை விட்டு அப்புறப்படுத்து வதில் கெட்டிக்காரர்கள். இதனால் முதலாளிகளோடும் மேலதிகாரிகளோடும் நல்ல இணக்கமான தொடர்பு இருக்கும்.

கும்பராசி பெண்கள்

கும்பராசிப் பெண்கள் உதவியாளர் களாக, தனிச் செயலாளர்களாக இருக்கும் அதிகாரிகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். ஏறத்தாழ அந்த மேலதிகாரியின் அனைத்து வேலைகளையும் இந்தப் பெண் செய்து முடிப்பார்.

கலை ராணி

கும்பராசி பெண்கள் சிலர், கலைக் துறையில் ஜொலிப்பதைப் பார்க்கலாம். நடிகையாக இருப்பது அரிது. ஆனால், சுக்கிரன் பலத்தால் எங்கோ ஓர் இருவர் இருக்கலாம். மேடை கலைகளைவிட பொறுமையும் அதிக உழைப்பும் நேரமும் தேவைப்படும் ஓவியம், தையல், பின்னல் போன்ற கலைகளில் சிறப்பாக விளங்குவார்கள்.

விஞ்ஞானிகள்

கும்பராசிப் பெண்கள் சிலர், நல்ல ஆராய்ச்சியாளராகவும், அறிவியல் சிந்தனையாளராகவும் இருப்பர். விற்பனையாளர், ஒருங்கிணைப்பாளர், வக்கீல், மனித உரிமைப் போராளி, சமூக சேவகர், நர்ஸ், சூப்பிரண்டு, பள்ளி, கல்லுரி ஆசிரியர்கள் போன்ற பணிகளில் சிறப்பாக விளங்குவர். பூமிக்கு அடியில் இருந்து பெறப்படும் பொருட்கள் தொடர்பான வியாபாரம் அல்லது ஆய்வு சிறந்த தொழிலாக அமையும். கருமையான பொருள்களும் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும். அடுப்புக்கரி விற்பனை, தார் ரோடு காண்ட்ராக்ட், பெட்ரோல் பங்க், பழைய இரும்பு பொருட்கள் சேகரித்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற தொழில்களும் கும்பராசியினருக்கு சிறப்பாக அமையும்.

நீண்டகாலத் திட்டம்

கும்பராசியினர் திட்டமிடுவதில் நிபுணர்கள். முதலாளிகளுக்காக வெகு சிறப்பாக திட்டமிட்டு முதலாளியையும் தொழிலாளிகளையும் இணைத்து வைப்பார்கள். தீர்க்க தரிசனம் உள்ளவர்கள். தங்களுடைய தொலைநோக்குப் பார்வையினால் நீண்டகாலத் திட்டங்களை அழகாக வகுத்துக் கொடுப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் நிழல் மனிதராக இருப்பதனால், இவர்களின் உழைப்பின் பெருமையை வேறொருவர் பகிரங்கமாக அனுபவித்துக் கொண்டிருப்பார். இவருடைய உழைப்பும் சிறப்பும் குடத்துள் இட்ட விளக்கு போல வெளியே பலருக்கு தெரியாமல் போக வாய்ப்புண்டு.

வேலை பெரிது சம்பளம் சிறிது

கும்ப ராசிக்காரர்கள் கௌரவப் பிரியர்கள். தங்களுக்கு சம்பாத்தியத்தைவிட கௌரவம் முக்கியம் என்று நினைப்பார்கள். தாங்கள் செய்யும் வேலை பெரிய வேலையாக இருக்க வேண்டும். ஆனால் சம்பளம் குறைவாக இருந்தாலும், அது குறித்து அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். தான் உண்மையாக வேலை செய்வதை போல, தனக்கு கீழ் இருப்பவர்களும் நேர்மையாகவும், உண்மையாகவும் வேலை செய்ய வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்ப்பார்கள்.

தனித்து இயங்குவோர்

கும்ப ராசியினர் பெரும்பாலும் தனியாக இருந்து வேலை செய்வதே விரும்புவார்கள். களப்பணிக்குச் செல்பவராக இருந்தாலும்கூட, இவருக்குக் கீழே பல குழுக்கள் இருந்தாலும் அல்லது இவரே களத்தில் இறங்கித் தரவு சேகரிப்பு செய்தாலும் தொழிலைப் பொறுத்த வரையில் பெரும்பாலும் தனிமையை விரும்புகின்றவர்களாக இருப்பர்.

The post கும்ப ராசிக்காரர்கள் தொழிலில் உச்சம் அடைவர் appeared first on Dinakaran.

Read Entire Article