கும்ப ராசி ஆண் குடும்பத்தின் வேர்

2 hours ago 4

கும்பம், மகரம் ஆகிய இரண்டும் சனியின் ஆதிக்கத்தில் உள்ள ராசிகள் என்றாலும் இரண்டு ராசிகளுக்குமான பண்புகள் வேறுபட்டு விளங்கும். கும்பராசி ஆண்கள் சுதந்திர மனப்பான்மை உடையவர்கள். போர்க் குணம் படைத்தவர்கள். தனித்தன்மையோடு விளங்குவார்கள். பேர் புகழுக்கு ஆசைப்படாதவர்கள். உறவுக்கும் நட்புக்கும் மதிப்பு கொடுப்பவர்கள். எப்போதும் கூட்டுக் குடும்பத்திலும் நண்பர் குழுவிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். பாரம்பரியத்தில் நம்பிக்கை உடையவர்கள். இனம், சாதி, மொழி, நாடு இவற்றின்மீது ஆழ்ந்த பற்று கொண்டவர்கள். ஊருக்கு உழைப்பவர்கள். இடம், பொருள், காலத்துக்கு ஏற்ப வளைந்து கொடுத்துச் செல்லும் நெகிழ்ச்சியான பண்புடையவர்கள்.

அன்பும் காதலும்

கும்ப ராசி ஆண்களில் பெரும்பாலோர் பகை, வன்மம் வெறுப்பு போன்ற குணங்கள் இல்லாதவர்கள் அல்லது இக்குணங்களை வெளியே காட்டாதவர்கள். எல்லோரிடமும் அன்போடும் பண்போடும் நடந்து கொள்வார்கள். இவர்களுக்கு சிலரை பிடிக்கவில்லை என்பது சம்பந்தப்பட்டவருக்கும் தெரியாது. நட்பு வட்டத்தில் இருப்பவர் எவருக்கும் தெரியாது. சனிக்குரிய பயந்த சுபாவம் இவர்களிடம் இருக்கும். சனிக்குரிய ஆள் அடிமைத்தனம் இவர்களிடம் இருக்கும். யார் என்ன உதவி கேட்டாலும் முடியாது, இயலாது என்று சொல்லாமல், அவர்கள் கேட்ட உதவியை இவர்கள் செய்து தருவார்கள். இதனால் சமூகத்தில் இவர்களுக்கு நல்ல மதிப்பு இருக்கும். பிறருக்காக வாழும் இவர்களுடைய வாழ்க்கை தியாக வாழ்க்கையாக விளங்கும்.

தியாகத் திருவுருவங்கள்

கும்ப ராசி ஆண்கள் தங்கள் காதலையும் வேலை வாய்ப்பையும் அடுத்தவர்களுக்காக விட்டுக் கொடுப்பார்கள். ஆனால், சில சந்தர்ப்பங்களில் அற்பமான விஷயங்களுக்குப் போட்டி போட்டுக் கொண்டும் போராடிக் கொண்டும், சண்டை பிடித்துக் கொண்டும் இருப்பார்கள். இதனால் இவர்களின் மனம், குணம் என்னவென்று வரையறுத்துச் சொல்ல முடியாது.

ஆர்வமும் முனைப்பும்

கும்ப ராசி ஆண்கள் புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் உடையவர்கள். அதனைச் செய்து காட்டுவதில் அல்லதுதான் பயிற்சி பெற்றதை நடை முறைக்குக் கொண்டு வருவதில் ஆர்வமும் முனைப்பும் காட்டுவார்கள். புதியவற்றைப் படித்துக் கொள்வதும் அதனை நடைமுறைப்படுத்துவதும் இவர்களுக்கு எளிதான விஷயங்களாகும்.

பழையன கழிதலும் புதியன புகுதலும்

கும்ப ராசி ஆண்களின் வாழ்க்கையில் பழமை போய் புதுமை புகுவது தொழில், காதல், குடும்பம் என அனைத்திலும் காணப்படும். எல்லோரிடத்திலும் அன்பு காட்டினாலும் பாடம் படிப்பு தொழில் வாய்ப்பு செல்வம் செல்வாக்கு என்று வரும்போது இவர்கள் சுயநலவாதிகளாகவே நடந்து கொள்வார்கள். மனைவி மக்களுக்கு கூட விட்டுத்தர மாட்டார்கள். கட்டுப்படவும் மாட்டார்கள். பெரும்பாலும் அமைதியான குடும்ப வாழ்க்கை இவருக்கு அமையும். ஆனால், சரிவராது என்று நினைத்த மாத்திரத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பித்து விடுவார். அது குறித்து கவலைப்பட மாட்டார். பொதுவாக மண வாழ்வில் கும்ப ராசியினர் பொறுமையாக இருந்து குடும்பத்தை நடத்துவார்கள். கும்ப ராசி ஆண்களின் ஆர்வம் அடிக்கடி மாறும். ஒரு துறையில் ஆர்வத்தோடு செயல்பட்டு வரும் போது வேறொரு துறை இவருக்கு விருப்பமானதாக தோன்றினால் இதை விட்டு அதற்கு மாறிவிடுவார். முன்னர் இருந்த துறையில் உச்சத்தை தொட்டிருக்கலாமே என்றால் ‘அதனால் என்ன இந்த துறையில் உயர் பதவி பெறலாமே’ என்று பதிலளிப்பார்.மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது சில கும்ப ராசியினரின் அடிப்படைக் கொள்கையாக இருக்கும். அவ்வப்போது எதையாவது மாற்றிக் கொண்டே இருப்பார்கள். ஹேர் ஸ்டைல், உடைகள், கார், பைக், வீடு என்று சில கும்ப ராசி ஆண்கள் அவ்வப்போது புதிய மாற்றத்தை புதிய நட்பு வட்டத்தை விரும்புவதைப் பார்க்கலாம்.

திடீர் முடிவுகள்

பெரும்பாலும் கும்ப ராசிக்காரர்கள் பயந்த சுபாவத்துடன் தங்கள் மனதுக்குள் இருக்கும் விருப்பு வெறுப்புகளைப் பிறர் அறியச் சொல்லாமல் ரகசியமாகவே வைத்திருப்பார்கள். இவர்கள் எப்போது என்ன முடிவு எடுப்பார்கள் என்று தெரியாது. அமைதியாக இருப்பதால் அடங்கி இருக்கின்றார் என்று எடுத்துக் கொள்ள இயலாது. திடீரென்று வேலையை ராஜினாமா செய்துவிடுவார். திடீரென்று வீட்டை விட்டு கிளம்பி தனிக் குடித்தனம் போய்விடுவார். திடீரென்று தன் சம்பளத்தைக் கொடுக்காமல் நிறுத்தி விடுவார். திடீரென்று பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தனியே போய்விடுவார். எனவே இவர் இதைச் செய்வார் இதைச் செய்ய மாட்டார் என்று இவருடைய நடவடிக்கைகளை வைத்து யாராலும் கணிக்க இயலாது. கும்ப ராசி ஆண் குடும்பத்தோடு ஒட்டி இருப்பது போலத் தோன்றினாலும் நிறுவனத்துக்காக உயிரைக் கொடுத்து உழைப்பது போலத் தோன்றினாலும் சட்டென்று தாமரை இலை தண்ணீர் போல உதறி விட்டுச் சென்று விடுவார். இவருடைய உளவியலை,கருத்தியலைக் கணிப்பது கடினமாகும்.

திட்டமும் செயல்பாடும்

கும்ப ராசிக்காரர்கள் திட்டமிடுவதில் கெட்டிக்காரர்கள். பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பித்து ராஜ்யம் வரை திட்டமிடுவர். இவர்களுக்குத் திட்டங்கள் முக்கியமே தவிர இறுதி வெற்றி முக்கியம் கிடையாது. எனவே, திட்டங்களில் காட்டும் அக்கறை, அந்ததிட்டங்களை செயல்படுத்துவதில் பெரும்பாலும் இருக்காது. இவர்களின் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் அடுத்தவர்கள் செயல் திறன் உடையவர்கள். அவர்கள் பெரிய அளவில் வெற்றி பெறுவார்கள். கும்ப ராசி ஆண் தொழிலதிபராக இருப்பதைவிட ஒரு தொழில் அதிபரிடம் மேனேஜராக நிர்வாகியாக இருப்பது சிறப்பானதாகும். இவருடைய யோசனைகளையும் நுண்ணிய செயல் திட்டங்களையும் அடுத்தவருக்காக செய்யும்போது அவர்களுடைய வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதாக இருக்கும். தனக்காக இவர்கள் திட்டமிடும்போது அதனை செயல் படுத்தும் வேளையில் சுணங்கிப் போய்விடுவார்கள். தொடங்கிய வேகத்தோடு பயணித்து இலக்கை எட்டும் வரை சோர்வடையாமல் தொடர் உற்சாகத்துடன் இருப்பது என்பது சனி ராசிக்காரர்களால் இயலாதது. சனி ராசியினர் அவ்வப்போது சோர்வடைந்து முடங்கிப்போய் தேங்கி விடுவார்கள். தொடர் ஓட்டம் இவர்களுக்கு சலிப்படையச் செய்யும். எனவே, இவர்களிடம் திட்டங்களை வாங்கிக் கொண்டு மற்றவர்கள் செயல்பட்டால் அந்த செயல்பாடு நிச்சயம் வெற்றியைத் தரும்.

அறிவும் ஆற்றலும்

கும்ப ராசி ஆண் கூர்மையான அறிவும் சிறந்த ஆற்றலும் உடையவர். நல்ல நினைவாற்றல் உண்டு. எந்தவொரு நிகழ்வையும் இவர் மறக்க மாட்டார். தக்க வேளையில் எடுத்துச் சொல்லி பதிலடி கொடுக்க உதவுவார். மற்றவருக்கு நினைவூட்டுவார். சிறந்த பகுப்பாய்வுத் திறன் கொண்டவர். ஒரு நிகழ்ச்சியை மனதில் வைத்துக் கொண்டு அந்த நிகழ்வுக்கு காரணம் என்ன? இந்த நிகழ்வின் பின் விளைவு என்ன? இந்நிகழ்வு எப்படி தொடங்கியது? எப்படி போய் முடியும்? இதனால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? என்று முழுமையாக ஆராய்ச்சி செய்து ஒரே வார்த்தையில் பிரமாதம் என்றோ வேஸ்ட் என்று சுருக்கமாக தன் கருத்தை உணர்த்தி விடுவார்.

முனைவர் செ.ராஜேஸ்வரி

The post கும்ப ராசி ஆண் குடும்பத்தின் வேர் appeared first on Dinakaran.

Read Entire Article