சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் இனயம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், இனயம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் புனித அந்தோணியார் தேவாலய வருடாந்திர திருவிழா நடந்துவரும் நிலையில் இன்று (மார்ச் 1) மாலையில் நடைபெற்ற தேர் பவனியில் அலங்காரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வைக்கப்பட்டிருந்த இரும்பு ஏணியை சாலையின் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாற்ற முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி, இனயம் புத்தன்துறையைச் சேர்ந்த விஜயன் ( 52) , சோபன் (45) , மனு ( 42) மற்றும் ஜெஸ்டிஸ் ( 35) ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.