*விவசாயிகள் புகார்
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க வழங்கி வந்த அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக பாசனத்துறை குற்றம்சாட்டியுள்ளது.தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் உள்ள குளங்களில் இருந்து விவசாயிகளே நேரடியாக இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது.
ஆன்லைன் மூலம் தாசில்தார்களுக்கு விண்ணப்பித்து பின்னர் நீர்வளத்துறை அல்லது உள்ளாட்சி துறை அதிகாரிகள் மூலம் நடைச்சீட்டு வழங்கி அதனை பயன்படுத்தி குளங்களை தூர்வாரி வண்டல் மண்ணை பயன்படுத்தி வந்தனர்.
குமரி மாவட்டம் உட்பட மாநிலம் முழுவதும் இவ்வாறு குளங்கள் தூர்வாரப்பட்டு வந்தன. இதனால் பாசன குளங்களை தூர்வார அரசு நிதி ஒதுக்க வேண்டிய தேவை எழவில்லை.
மேலும் விவசாயிகளும் வண்டல் மண் எடுத்து வந்தனர். ஜேசிபி, ஹிட்டாச்சி, டிராக்டர், டெம்போ வாகனங்கள் வைத்திருந்தவர்களும் இதனால் பயன்பெற்று வந்தனர். பருவமழை காலங்களில் குளங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது. விவசாயம் செழிப்படைந்ததுடன் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. பல இடங்களில் குடிநீர் பிரச்னைகளும் எழவில்லை. கோடைக்காலங்களிலும் குளங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் காணப்பட்டது.
குமரி மாவட்டத்திலும் குளங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் குளங்களில் தண்ணீர் நிரம்பி வந்தது. அணைகளில் திறந்துவிடப்படும் தண்ணீரை விவசாயிகள் குளங்களில் நிரப்பி பாசனம் செய்து வந்தனர்.
இந்தநிலையில் அண்மைகாலமாக பாசன குளங்களில் வண்டல் மண் அள்ள அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பான விண்ணப்பங்கள் அலுவலகங்களில் தேங்கியுள்ளதாகவும் விவசாயிகள் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளன.
வடகிழக்கு பருவமழை பெய்த நிலையில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை காலம் முடிந்துள்ள நிலையில் புதர் மண்டிய பல குளங்களிலும் தண்ணீர் இல்லாத நிலை உள்ளது.
எனவே தற்போது விண்ணப்பங்களை பரீசீலித்து நடவடிக்கை மேற்கொண்டால் குளங்களில் வண்டல் மண் அள்ளி தூர்வாரிட இயலும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக வருவாய்துறை, நீர்வளத்துறை அலுவலகங்களில் அணுகினால் அதிகாரிகள் உரிய பதில் அளிப்பது இல்லை என்று விவசாயிகள் புகார் கூறுகின்றனர். மேலும் விவசாயிகள் கோரிக்கை தின கூட்டத்திலும் விவசாயிகள் கோரிக்கைகள் முன்வைத்திருந்தனர்.
மாவட்டத்தில் 210 குளங்களில் வண்டல் எடுக்க அனுமதித்து குமரி மாவட்ட அரசிதழில் விபரங்கள் வெளியிடப்பட்டிருந்தது. தற்போது பிற மாவட்டங்களில் குளங்களில் வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் குமரி மாவட்டத்திலும் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.
தற்போது தாசில்தார்கள் பிறப்பித்த உத்தரவு ஒரு மாத காலமே செல்லுபடியாகும் என்பதால் அதன் பிறகு செயற்பொறியாளர், உதவி பொறியாளர் அலுவலகங்களில் சென்று அனுமதி பெற வேண்டியதும் உள்ளது, எனவே வண்டல் மண் எடுக்க விரைந்து அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக பாசனத்துறையை சேர்ந்த விவசாயிகள் தாணுபிள்ளை, முருகேசபிள்ளை, அருள் ஏசுதாஸ், ஜெனில் சிங் உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.
நடைச்சீட்டு வழங்காமல் உள்ளனர்
குமரி மாவட்ட பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ கூறுகையில், ‘குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று கீழ் மட்ட அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஒரு சில தாசில்தார்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து உத்தரவுகளை வழங்கினாலும் அதன் பிறகு நீர்வளத்துறை அதிகாரிகள் நடைச்சீட்டு வழங்காமல் உள்ளனர்.
இதனால் தாசில்தார்கள் பிறப்பித்த உத்தரவுகள் காலாவதி ஆவதுடன் அந்த குளங்களில் பின்னர் தூர்வாரவே முடியாத நிலையும் உள்ளது. இதனால் விவசாயிகள் வழங்கிய நூற்றுக்கணக்கான வண்டல் மண் கோரிய விண்ணப்பங்கள் தாலுகா அலுவலகங்களிலும், நீர்வளத்துறை, உள்ளாட்சி துறை அலுவலகங்களிலும் நிலுவையில் உள்ளன. எனவே இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்து குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றார்.
The post குமரி மாவட்டத்தில் குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி நிறுத்திவைப்பு appeared first on Dinakaran.