குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே டீசல் என்ஜின் மூலம் மலை ரெயில் சோதனை ஓட்டம்

2 months ago 15

குன்னூர்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் வழியாக ஊட்டிக்கு அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் மலை ரெயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது சுற்றுலா பயணிகளுக்காக இந்த மலை ரெயில் இயக்கப்படுகிறது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஆரம்ப கால கட்டத்தில் குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் இயக்கப்பட்டது. நிலக்கரி தரமற்று இருந்ததால் மலை ரெயில் தாமதமாக வந்து கொண்டு இருந்தது. இதனால் ரெயில் பயணிகள் அவதியுற்றனர்.

இதனை கருத்தில் கொண்டு பர்னஸ் ஆயில் நீராவி என்ஜின் மூலம் மேட்டுப்பாளையம் -குன்னூர் இடையே மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பர்னஸ் ஆயில் மூலம் இயக்கப்பட்டதால் அதிகளவில் மாசு ஏற்பட்டது. இதனால் பர்னஸ் ஆயில் மூலம் மலை ரெயில் இயக்கப்படுவதை மாற்றியமைக்க மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக டீசல் என்ஜினாக மாற்றியமைக்கும் பணியை குன்னூர் ரெயில்வே பணிமனையில் பணியாற்றும் சீனியர் டெக்னீஷியன் மாணிக்கம் என்பவர் மேற்கொண்டார். அவரது முயற்சியால் ஏற்கனவே 3 பர்னஸ் ஆயில் என்ஜின்கள், டீசல் என்ஜின்களாக மாற்றியமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ஒரு என்ஜின் மட்டும் டீசல் என்ஜினாக மாற்றப்படாமல் இருந்தது.

இந்த என்ஜினும் தற்போது டீசல் என்ஜினாக மாற்றப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது. அதன்படி குன்னூரிலிருந்து ரன்னிமேடு வரை டீசல் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டு மீண்டும் குன்னூருக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து 2-வது கட்டமாக மீண்டும் சோதனை ஓட்டம் நடத்திய பிறகு மலை ரெயில் சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Read Entire Article